'பீஸ்ட்' திரைப்படத்தில் அரசியல் சார்ந்த கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதா? - இயக்குனர் நெல்சன் பதிலளிக்க மறுப்பு
'பீஸ்ட்' திரைப்படத்தில் அரசியல் சார்ந்த கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதா என்பது குறித்த கேள்விக்கு இயக்குனர் நெல்சன் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
சென்னை, பீஸ்ட்' திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், சென்னை, தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற 'பீஸ்ட்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் நெல்சன், பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் பங்கேற்றனர். பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் நெல்சன் கூறியதாவது:- எல்லோரும் வணக்கம். நாளை பீஸ்ட் திரைப்படம் வெளியாக உள்ளது. அனைவரும் படத்தை சென்று பாருங்கள். நடிகர் விஜயை பத்தி சொல்ல வேண்டும் என்றால் சொல்லிக்கொண்டே போகலாம். இந்த படத்தில் நடிகர் விஜய் அருமையாக நடித்துள்ளார். ரொம்ப கஷ்டப்பட்டு நடிக்க நான் தயார் என்று நடிகர் விஜய் கூறினார். மீதியை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என விஜய் சொன்னார். படப்பிடிப்பில் என்ன பிரச்சினை வந்தாலும், சரிசெய்து கொடுத்து உதவி செய்தார். ரொம்ப சின்சியராக இருந்து நடித்து கொடுத்தார். தொடர்ந்து இயக்குநர் நெல்சனிடம் 'பீஸ்ட்' திரைப்படத்தில் அரசியல் சார்ந்த கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதா என்று கேள்வி கேட்டனர். இந்த கேள்விக்கு தனக்கு அரசியல் தெரியாது என இயக்குநர் நெல்சன் பதில் அளித்தார். மேலும் 'பீஸ்ட்' இசை வெளியீட்டு விழா குறித்த கேள்விக்கும் இயக்குனர் நெல்சன் பதிலளிக்க மறுத்துவிட்டார். அதனை தொடர்ந்து நடிகை பூஜா ஹெக்டே கூறியதாவது:- விஜய் கடினமாக உழைக்கும் நடிகர். நேரத்திற்கு ஷூட்டிங்-க்கு வந்துவிடுவார். கடின உழைப்பாளி.. அவரைப் போன்ற மனிதருடன் பணியாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது. நடிகர் விஜய்யின் 65வது படம் இது. ஆனால், அதனை வெளிப்படுத்தாமல் மிகவும் அடக்கமாக இருந்தார். இயக்குநர் நெல்சனின் பாணி அனைவரும் ரசிக்கும்படி இருக்கும் என்று கூறினார்.