அறிவுச் சமத்துவம் என்ற எல்லை எட்டப்படும் வரை நுழைவுத் தேர்வு அநீதிதான் - வைரமுத்து டுவீட்
அறிவுச் சமத்துவம் என்ற எல்லை எட்டப்படும் வரை நுழைவுத் தேர்வு என்பது அநீதி என்று வைரமுத்து கூறியுள்ளார்.
சென்னை,
2022-2023-ம் கல்வியாண்டு முதல், பல்கலைக்கழக மானியக்குழுவின் நிதியுதவியுடன் இயங்கும் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும், பல்வேறு படிப்புகளுக்கான சேர்க்கைகள் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) நடத்தும் பொது பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு (சி.யு.இ.டி.) மூலம் மட்டுமே நடைபெறும் என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்தது.
இந்த நிலையில் மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு குறித்து, திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து அறிவுச் சமத்துவம் என்ற எல்லை எட்டப்படும் வரை நுழைவுத் தேர்வு என்பது அநீதி என்று பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'மத்தியப் பல்கலைக் கழகத்துக்கும் நுழைவுத் தேர்வு என்ற அறிவிப்பை அறிவுலகம் ஏற்றுக்கொள்ளாது.
இது ஏழை மாணவர்கள் மீது மேட்டிமைச் சமூகம் விடுக்கும் மிரட்டல். அறிவுச் சமத்துவம் என்ற எல்லை எட்டப்படும் வரை நுழைவுத் தேர்வு அநீதிதான். ஓட்டத் திறனாளிகளோடு மாற்றுத் திறனாளிகள் ஓட முடியுமா?' என்று கூறியுள்ளார்.
மத்தியப் பல்கலைக் கழகத்துக்கும்
— வைரமுத்து (@Vairamuthu) April 7, 2022
நுழைவுத் தேர்வு என்ற அறிவிப்பை
அறிவுலகம் ஏற்றுக்கொள்ளாது
இது
ஏழை மாணவர்கள் மீது
மேட்டிமைச் சமூகம்
விடுக்கும் மிரட்டல்
அறிவுச் சமத்துவம் என்ற
எல்லை எட்டப்படும் வரை
நுழைவுத் தேர்வு அநீதிதான்
ஓட்டத் திறனாளிகளோடு
மாற்றுத் திறனாளிகள்
ஓட முடியுமா?
முன்னதாக, மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வை திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.