ஆஸ்கர் தொகுப்பாளரை அறைந்த வில் ஸ்மித்- 6 வருடங்களுக்கு முன்பே கணித்த டுவிட்டர் பதிவு வைரல்..!!

வில் ஸ்மித், கிறிஸ் ராக்கை அறைவது தொடர்பாக கடந்த 6 வருடத்துக்கு முன்னர் டுவிட்டரில் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

Update: 2022-03-29 11:22 GMT
லாஸ் ஏஞ்சல்ஸ்,

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.  லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ஹாலிவுட் பவுல்வார்ட்டில் உள்ள டால்பி திரையரங்கத்தில் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இந்த ஆண்டு வழக்கமான பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. 

இந்த நிலையில், கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்ததற்காக நடிகர் வில் ஸ்மித், சிறந்த நடிகருக்கான விருதைப் பெறுவதற்காக இந்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்கு வந்திருந்தார். 

அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நடிகர் கிறிஸ் ராக் நகைச்சுவையாக பேசி கொண்டிருந்தார். அவர் நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி நடிகை ஜடா பிங்கெட் ஸ்மிதின் உடல்நிலை பற்றி  நகைச்சுவையாக பேசினார். 

இதனால் ஆத்திரமடைந்த வில் ஸ்மித், மேடையை நெருங்கி தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் முகத்தில் பளாரென அறைந்து, விழா அரங்கை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். பின்னர் அவர் தனது இருக்கைக்குத் திரும்பி,  “என் மனைவியின் பெயரை உன் பயன்படுத்தாதே " என கூச்சலிட்டார்.

நடிகர் வில் ஸ்மித், கிறிஸ் ராக்கை தனது மனைவியை கேலி செய்ததற்காக மேடையில் அறைந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகர் வில் ஸ்மித்தின் செயல், உலக அரங்கில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நேற்று நடந்த சம்பவத்தின்போது, தான் சற்று உணர்ச்சிவசப்பட்டுவிட்டதாக நடிகர் வில் ஸ்மித் தெரிவித்துள்ளார். தனது இந்த செயலால் பெரும் சங்கடம் அடைந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, “விழாவில் நகைச்சுவை என்பது இயல்பானது தான் என்றாலும், என்னுடைய மனைவியின் உடல்நல பாதிப்பு குறித்து தொகுப்பாளர் கிறிஸ் ராக் கேலி செய்தது என்னை உணர்ச்சிவசப்பட வைத்துவிட்டது.

அன்பு நிறைந்த உலகில் வன்முறைக்கு இடமில்லை. எனது இந்த செயலால் பெரும் சங்கடம் அடைந்திருக்கிறேன். எனது செயலுக்காக கிறிஸ் ராக்கிடமும், நிகழ்ச்சி அமைப்பாளர்களிடமும், நிகழ்ச்சியை நேரிலும் தொலைக்காட்சியிலும் பார்த்தவர்களிடமும் மன்னிப்பு கோருகிறேன்" என வில் ஸ்மித் தெரிவித்தார்.

இந்த நிலையில் வில் ஸ்மித் தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை அறைவது தொடர்பாக கடந்த 6 வருடத்துக்கு முன்னர் டுவிட்டரில் ஒருவரிட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக ஜேசன் என்ற அந்த நபர் கடந்த 2016 ஆம் ஆண்டு தனது டுவிட்டர் பதிவில், " வில் ஸ்மித் கிறிஸ் ராக்கை முகத்தில் குத்த வேண்டும் . அவருக்கு வேறு வழியில்லை " என பதிவிட்டுள்ளார்.

2016 ஆம் ஆண்டு நடந்த ஆஸ்கார் விழாவில் பங்கேற்காததற்காக  வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட்-ஸ்மித் மீது கிறிஸ் ராக் கண்டனம் தெரிவித்து இருந்தார் . அப்போது ஜேசன் இதை பதிவிட்டுள்ளார். 

அவரின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்