நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது போலீசில் பரபரப்பு புகார்
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் நயன்தாராவும் ஒருவர். அதேபோல், தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனர் விக்னேஷ் சிவன். இவர்கள் இருவரும் காதலித்து வருகின்றனர்.
இதற்கிடையில், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து ‘ரவுடி பிக்சர்ஸ்’ என்ற பெயரில் பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். இந்த பட தயாரிப்பு நிறுவனம் பல்வேறு திரைப்படங்களை தயாரித்தும் வெளியிட்டும் வருகின்றனர். மேலும், ‘ரவுடி பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் வெளியான ‘கூழாங்கல்’ என்ற திரைப்படம் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது.
இந்நிலையில், நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது சென்னை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரவுடிகள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தங்கள் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்திற்கு ‘ரவுடி பிக்சர்ஸ்’ என பெயர் வைத்திருப்பது ரவுடிகளை ஊக்கப்படுத்தும் வகையில் உள்ளதாக புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நயன்தாரா - விக்னேஷ் சிவன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது.