கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்து நடிகை உள்பட 3 பேர் பலி
ஐதராபாத்தில் கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் நடிகை, அவரது காதலர் உள்பட 3 பேர் பலியானார்கள்
ஐதராபாத்
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடித்த ஹோலிப்பண்டிகையின் போது தெலுங்கு டிவி நடிகை காயத்ரி (வயது 26) தனது ஆண் நண்பர் ரத்தோட் என்பவருடன் கலந்து கொண்டார். மிகவும் கோலாகலமாக நடைபெற்ற கொண்டாட்டத்தில் மது விருந்தும் நடந்துள்ளது. இதில் இருவரும் அளவுக்கு அதிகமாக குடித்துள்ளதாக கூறப்படுகிறது.
விருந்து முடிந்ததும் இருவரும் காரில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தனர். ரத்தோட் காரை ஓட்ட நடிகை காயத்ரி அருகில் அமர்ந்து வந்துள்ளார். அவர்கள் சென்ற கார் கச்சிபவுலி அருகே அதிவேகமாக சென்று கொண்டிருந்த போது சாலையில் இருந்த தடுப்பில் மோதி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் நடிகை காயத்ரி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். காயத்ரியின் நண்பர் ரத்தோட் படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்து ரத்தோட்டை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ரத்தோட்டும் உயிர் இழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
காரில் அடிபட்ட மகேஸ்வரி என்ற பெண்ணும் பலியானார். அவரது உடலை காருக்கு அடியில் இருந்து போலீசார் மீட்டனர். நடிகை காயத்ரியின் மரணம் தெலுங்கு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.