நடிகர் சங்க தேர்தல்: பதிவான வாக்குகளை எண்ணும் தேதி அறிவிப்பு
பதிவான வாக்குகளின் எண்ணிக்கை வருகிற 20-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
சென்னை,
கடந்த 2019ம் ஆண்டு ஜூன் 23-ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் திரை பிரபலங்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தினர். இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே தேர்தலை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், தென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியையும் நியமித்தது.
இந்த வழக்கு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த நிலையில், நடிகர் சங்க தேர்தல் செல்லும் என்றும், பதிவான வாக்குகளை நான்கு வாரங்களில் எண்ண வேண்டும் என்ற தேர்தல் அதிகாரிக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
இந்நிலையில், பதிவான வாக்குகளின் எண்ணிக்கை வருகிற 20-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் அப்பகுதியில் அமைந்துள்ள குட் ஷெப்பர்ட் பள்ளி வளாகத்தில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.