வலிமை படத்தின் முதல் காட்சி டிக்கெட் - டுவிட்டரில் வெங்கட் பிரபு, பிரேம்ஜி சுவாரசிய பதிவு..!
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வலிமை திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது.
சென்னை,
நடிகர் அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் எச். வினோத் இயக்கியுள்ள திரைப்படம் 'வலிமை'. இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூர் இணைந்து தயாரித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வலிமை திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. உலகம் முழுவதும் 4000 திரையரங்குகளில் வலிமை திரைப்படம் வெளியாகிறது.
இந்த நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு, வலிமை திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கு (FDFS) டிக்கெட் வாங்கியுள்ளதாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அந்த டுவிட்டுக்கு வெங்கட் பிரபுவின் தம்பியும் நடிகருமான பிரேம்ஜி அமரன், 'தயவுசெய்து எனக்கு ஒரு டிக்கெட் தரவும்' என்று கேட்டு பதிவிட்டார்.
அதற்கு அவர்கள் இருவரின் தந்தையும் இசையமைப்பாளருமான கங்கை அமரன், 'பிரபு, பிரேமையும் கூப்பிட்டுட்டு போ' என்று பதிவிட்டுள்ளார். இவர்களின் சுவாரசியமான இந்த டுவிட்டர் உரையாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.