நடிகை சித்ரா மாரடைப்பால் காலமானார்
நடிகை சித்ரா சென்னையில் தனது வீட்டில் மாரடைப்பால் காலமானார்.
சென்னை
பிரபல நடிகை நல்லெண்ணெய் சித்ரா ( வயது 56) இவரது குடும்பம் சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்தது. நடிகை சித்ரா இன்று காலை தனது வீட்டில் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பல்வேறு பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
1975 ஆம் ஆண்டு கமல்ஹாசன், ஸ்ரீவித்யா, மற்றும் ரஜினிகாந்தின் முதல் படமான அபூர்வ ராகங்கள் படத்தில் இயக்குனர் கே.பாலச்சந்தரால் சித்ரா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்ததால் மக்களிடையே நல்லெண்ணெய் சித்ரா என பிரபலமடைந்தவர்.
80 மற்றும் 90 களில், சித்ரா மலையாளம் மற்றும் தமிழில் பிரபல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.
ராஜபார்வை படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். மலையாளத்தில் மோகன்லால் மற்றும் பிரேம் நசீர் ஆகியோருக்கு ஜோடியாக 1983 ஆம் ஆண்டு அட்டகளஷம் திரைப்படத்தில் நடித்தார்.
மோகன்லால் 'பஞ்சகனி' ஆறாம் தம்புரான், உட்பட மிகப் பெரிய மலையாளப் படங்களிலும் அவர் நடித்துள்ளார்.மம்முட்டியுடன் ஒரு வடக்கன் வீரகதா மற்றும் அமரம் மலையாள படங்களில் நடித்துள்ளார்.
நயம் வக்தாமகுன்னு, ஏகலவன், ராஜவாச்சா, தேவாசுரம், ஆறாம் தம்பூரன், கமிஷனர், உஸ்தாத் உள்பட மலையாளா படங்களில் நடித்து உள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஊர்க்காவலன், நடிகர் பாண்டியராஜன் நடிப்பில் வெளியான கோபாலா கோபாலா, பொண்டாட்டி ராஜ்ஜியம், சின்னவர் உள்பட 300க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்து உள்ளார்.
திருமணத்திற்கு பிறகு சித்ரா நடிப்பதை நிறுத்தி கொண்டார். அவர் தொழிலதிபரான விஜயரராகவனை மணந்தார், தம்பதியருக்கு மகாலட்சுமி என்ற மகள் உள்ளார்.