முதல் அமைச்சரிடம் சட்டவிரோத இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம் -நடிகர் விஷால்

முதல் அமைச்சரிடம் சட்டவிரோத இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம் என நடிகர் விஷால் கூறினார்.

Update: 2019-02-05 10:54 GMT
சென்னை

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியை  தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் சந்தித்து பேசினார். இளையராஜா நிகழ்ச்சியை நடத்த உறுதுணையாக இருந்ததற்காக முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்து தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் திரையுலகினர் நன்றி தெரிவித்தனர்.

முதல் அமைச்சருடனான சந்திப்பிற்கு பிறகு  நிருபர்களுக்கு பேட்டி அளித்த நடிகர் விஷால் கூறியதாவது:-

இளையராஜா 75 நிகழ்ச்சியை நடத்த உறுதுணையாக இருந்ததற்காக முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தோம். 

இளையராஜாவும் ரஹ்மானும் ஒரே மேடையில் பங்கேற்ற நிகழ்வு இயக்குநர் பார்த்திபனால் சாத்தியமானது. விழாவில் ஒரே மேடையில் இளையராஜா பாட, ரஹ்மான் இசையமைக்க... இதுபோன்று வேறு எங்கும், கோடீஸ்வரர் வீட்டுத் திருமணத்தில் கூட நடக்காது. எவ்வளவு கோடி கொடுத்தாலும் இதைப் பார்க்கமுடியாது. ஆனால் தயாரிப்பாளர் சங்கம் நடத்தும் பாராட்டு விழாவில் ராஜாவும் ரஹ்மானும் ஒரே மேடையில் தோன்றினால் நன்றாக இருக்கும் என அவர் நினைத்து செய்த விஷயம் இது. பாராட்டு விழாவுக்கு அனைவருக்கும் அழைப்பிதழ் வழங்கினோம். நடிகர், நடிகைகள் பலர் வரவில்லை.

வரி விவகாரத்தில் மற்ற மொழிப்படங்களை விட தமிழ்ப் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை வைத்துள்ளோம். சட்டவிரோத  இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தோம். 

மத்திய, மாநில அரசுகள் நினைத்தால் சட்டவிரோதமான இணையத்தளங்களை முடக்க முடியும். தமிழக அரசு நினைத்தால் திருட்டு விசிடியை ஒழிக்க முடியும்  என கூறினார்.

மேலும் செய்திகள்