விமர்சனங்களுக்கு வருந்தியது இல்லை- ‘பிளஸ் சைஸ் மாடல்’ திவ்யா
உடல் பருமனாக இருந்தால், சீக்கிரம் திருமணமாகாது, குழந்தை பிறக்காது என்று கூறி, எதிர்மறை எண்ணங்களை விதைக்கிறார்கள். தோற்றம் ஒரு பொருட்டே கிடையாது. அதற்கு நானே உதாரணம்.
உயரம், எடை, நிறம் என ஒருவரின் உருவத்தைக் கேலி செய்வது திரையில் தொடங்கி, அன்றாட வாழ்க்கை வரை சகஜமாகி வருகிறது. இதனால் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
அதே சமயம், ‘பாடி ஷேமிங்’ எனும் உருவ கேலிக்கு எதிரான குரல்களும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன. அதில் ஒருவர் திவ்யா.
120 கிலோ எடை கொண்ட ‘பிளஸ் சைஸ் மாடல்’. தான் கடந்து வந்த கடினமான பாதையில் மற்றவர்கள் பயணிக்கக் கூடாது என்ற நோக்கத்தில் யூடியூப் சேனல் மூலம் உருவ கேலிக்கு எதிராகக் குரல் எழுப்பி வருகிறார். அவரது பேட்டி..
உங்களைப் பற்றி?
என்னுடைய சொந்த ஊர் திருச்சி. பள்ளி, கல்லூரி படிப்பை அங்குதான் முடித்தேன். கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரிந்தேன். இப்போது, யூடியூப் சேனல் நடத்தி வருகிறேன்.
நான் பிறக்கும் போதே 4 கிலோ எடை இருந்தேன். சிறுவயதில் இருந்தே குண்டாகத்தான் இருக்கிறேன். அதற்காக ஒரு நாளும் வருந்தியது இல்லை.
நான் விரும்பிய உடைகளை அணிய மாட்டேன். அவற்றை அணிந்தால் பிறர் கேலி செய்வார்களோ? என்ற அச்சம் எனக்குள் இருந்தது.
அதற்குப் பெயர் ‘பாடி ஷேமிங்’ என்று அப்போது தெரியாது. பிறர் கருத்துகளுக்காக நமக்கு நாமே தடை போடக் கூடாது எனும் புரிதல் அந்த வயதில் இல்லை.
உங்களுக்கு நேர்ந்த ‘பாடி ஷேமிங்’ அனுபவங்களை எவ்வாறு எதிர்கொண்டீர்கள்?
கல்லூரி நாட்களில் தான் உடலமைப்பு சார்ந்த அவமானங்களையும், கேலிகளையும் எதிர்கொள்ளத் தொடங்கினேன்.
கல்லூரிக்குள் நடந்து செல்லும்போது, சீனியர் மாணவர்கள் என் உடல் எடை குறித்துக் கேலி செய்வார்கள். அது என் காதில் விழுந்தாலும், கண்டு கொள்ளாமல் சென்று விடுவேன். நாளுக்கு நாள் கிண்டல்களும், கேலிகளும் அதிகரிக்கத் தொடங்கின.
ஒரு நாள் என்னை கேலி செய்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தேன். அவ்வளவுதான் அனைவரும் அமைதியாகி விட்டார்கள். அந்த சம்பவம் என் கண்ணைத் திறந்து வைத்தது என்றே சொல்லலாம்.
தக்க பதிலடி கொடுத்தால்தான் வீண் விமர்சகர்களின் வாயை மூட முடியும் என்பதைப் புரிந்துகொண்டேன். அதன் பிறகு, விமர்சனங்களைப் பற்றி கவலைப்படுவது இல்லை.
‘பிளஸ் சைஸ் மாடல்’ மற்றும் யூடியூப்பராக மாறியதன் பின்னணி என்ன?
கல்லூரி படிப்பை முடித்தபிறகு, கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரிந்தேன். மனதிற்கு திருப்தியான பணியாக அது அமையவில்லை. அந்த சமயத்தில் ‘டிக் டாக்’ செயலி பிரபலமாக இருந்தது.
பள்ளிப்பருவத்தில் பரத நாட்டியம் முறைப்படி கற்றுக்கொண்டு அரங்கேற்றம் நடத்தினேன். நடனமாடுவதில் எனக்கு அலாதி விருப்பம். அதனால், ஓய்வு நேரங்களில் நடனமாடி, அந்த வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டேன்.
அதற்கு பலரும் பாராட்டிக் கருத்துகளைப் பதிவிட்டனர். அந்த உற்சாகத்துடன் யூடியூப் சேனல் ஆரம்பித்தேன். இன்று ‘ஸ்னாசி தமிழச்சி' என்ற பெயரால் சமூக வலைத்தளங்களில் அடையாளப்படுத்தப்படுகிறேன். யூடியூப்பில் கிடைத்த புகழால், மாடலிங் வாய்ப்புகளும் கிடைத்தன.
உடல் அமைப்பு சார்ந்து மக்களிடையே எத்தகைய மாற்றம் ஏற்பட வேண்டும் என நினைக்கிறீர்கள்?
உணவுப் பழக்கம் மட்டும் உடல் எடை கூடுவதற்கான காரணம் கிடையாது. தைராய்டு, சிக்கலான பிரசவம், சீரற்ற மாதவிடாய் போன்ற பல காரணங்கள் உள்ளன. அதைப் பற்றிய புரிதல் இல்லாமல் குண்டாக இருப்பவர்களை கேலி செய்கிறார்கள்.
எனது யூடியூப் வீடியோக்களின் மூலம் உடல் எடை அதிகரிப்பதை பற்றியும், அதிக எடை கொண்டவர்கள் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள எவ்வளவு முயற்சிக்கிறார்கள் என்பதைப் பற்றியும், அவர்களை கேலி செய்வதால் மனதளவில் அவர்கள் அடையும் துன்பத்தைப் பற்றியும் தெரியப்படுத்தி மாற்றத்தை ஏற்படுத்த முயன்று வருகிறேன்.
அதே போல, உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் ‘பாடி ஷேமிங்’கை எப்படி புறந்தள்ள வேண்டும், எதிர்மறை எண்ணங்களிலிருந்து எவ்வாறு விடுபட வேண்டும் என்பது பற்றிய வீடியோக்களையும் மாற்றத்திற்கான விதையாக நினைத்து பதிவிட்டு வருகிறேன்.
உடல் எடை அதிகம், குறைவு என்பதைத் தாண்டி, ஆரோக்கியமாக இருக்கிறோமா என்பதே முக்கியமானது. ‘பிட்னஸ்’ என்பது உடல் சார்ந்தது மட்டுமில்லை; மனதும் உற்சாகத்துடன் இருக்க வேண்டும். அந்த வகையில் நான் ஆரோக்கியமாகவே இருக்கிறேன்.
உடல் பருமனாக உள்ளவர்கள் அதிகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்ன?
உடல் பருமனாக இருந்தால், சீக்கிரம் திருமணமாகாது, குழந்தை பிறக்காது என்று கூறி, எதிர்மறை எண்ணங்களை விதைக்கிறார்கள். தோற்றம் ஒரு பொருட்டே கிடையாது. அதற்கு நானே உதாரணம்.
140 கிலோ எடை இருக்கும் போதுதான் எனக்கு திருமணமாகியது. குழந்தையும் பிறந்தது. எடை அதிகமாக இருப்பதால், பிரசவத்தில் எந்தச் சிக்கலும் ஏற்படவில்லை.
ஆரோக்கியமான, அழகான தேவதை எங்களுக்கு மகளாகப் பிறந்திருக்கிறாள். என்னுடைய திறமைகளை வெளிக்காட்டுவது தொடங்கி, எல்லாவிதத்திலும் என் கணவர் எனக்கு ஆதரவாக இருக்கிறார்.
இரண்டு மாதங்களில் 15 கிலோ எடைக் குறைப்பு செய்தது குறித்து?
குழந்தை பிறந்த பிறகு, என் மகளைத் தூக்கிக்கொண்டு நடப்பதில் சிரமம் இருந்ததால், எனது எடையைக் குறைப்பதற்கு முடிவெடுத்தேன். இரண்டே மாதங்களில் எனக்கு பிடித்தமான நடன முறையிலேயே 14.5 கிலோ எடை குறைத்தேன்.
உருவ கேலிக்கு ஆளாகும் நபர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?
உங்கள் உடல் அமைப்பை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். உங்களை நீங்களே நேசிக்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் கருத்து கூறுபவர்கள் ஓயமாட்டார்கள். அவர்களது கருத்துகளின் மீது கவனம் செலுத்தாதீர்கள்.
எதிர்மறை எண்ணங்களைப் புறக்கணித்து, நேர்மறையான எண்ணம் கொண்டவர்களுடன் பழகுங்கள். இந்த உடை அணியலாமா? இந்த மேக்கப் போடலாமா? என்றெல்லாம் சிந்தித்து குழப்பம் அடையாதீர்கள். விரும்பிய செயலைச் செய்வதற்கு தயக்கம் கொள்ளாதீர்கள். தாழ்வு மனப்பான்மையை தவிர்த்து விடுங்கள்.