மன அமைதியை மேம்படுத்தும் ஜேக்கப்சனின் தளர்வு நுட்பம்
உடலில் ஒவ்வொரு தசைக் குழுவையும் 5 விநாடிகள் இறுக்கமாக வைத்திருக்க வேண்டும். 10 முதல் 20 வினாடிகள் வரை முழுமையாக தளர்த்தி மூச்சை வெளியேற்ற வேண்டும். இந்தப் பயிற்சியை முழுமையாக செய்வதற்கு 15 முதல் 20 நிமிடங்கள் ஒதுக்க வேண்டும்.
குடும்ப நிர்வாகம், வேலை என பல தளங்களில் இயங்கிக்கொண்டு இருக்கும் பெண்கள், சில நேரங்களில் மன அழுத்தத்திற்கு உள்ளாவார்கள். உடல் சோர்வு, பதற்ற நிலை போன்றவற்றையும் உணர்வார்கள். இந்த மன அழுத்தத்தை குறைத்து, உடலை தளர்வுபடுத்த உதவக்கூடியது ‘ஜேக்கப்சனின் தளர்வு நுட்பம் (JPMR). இதை ‘முற்போக்கான தசை தளர்வு’ என்றும் அழைக்கலாம்.
இது தசைகளின் இறுக்கம், பதற்றம், மன அழுத்தம், ஒற்றைத் தலைவலி, சிஸ்டாலிக் ரத்த அழுத்தம், முதுகு வலி ஆகியவற்றை குறைக்கிறது. வலி நிவாரணம், சிறந்த தூக்கம் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது.
இந்தப் பயிற்சியை மருத்துவரின் ஆலோசனையை பெற்ற பின்பு செய்வதே நல்லது.
பயிற்சி செய்யும் முறை
‘ஜேக்கப்சனின் தளர்வு’ என்பது வீட்டிலேயே செய்யக்கூடிய எளிதான நுட்பமாகும். இந்தப் பயிற்சி செய்வதற்கு உபகரணங்கள் எதுவும் தேவையில்லை. மனதை திசைத்திருப்பாத அமைதியான இடத்தில் உட்கார்ந்து, முழுமையாக கவனம் செலுத்துவதே இதன் அடிப்படையாகும்.
உடலில் ஒவ்வொரு தசைக் குழுவையும் 5 விநாடிகள் இறுக்கமாக வைத்திருக்க வேண்டும். 10 முதல் 20 வினாடிகள் வரை முழுமையாக தளர்த்தி மூச்சை வெளியேற்ற வேண்டும். இந்தப் பயிற்சியை முழுமையாக செய்வதற்கு 15 முதல் 20 நிமிடங்கள் ஒதுக்க வேண்டும்.
முதலில், படுத்து அல்லது உட்கார்ந்து கொள்ளுங்கள். உங்கள் முழு உடலையும் தளர்த்தி ஓய்வெடுங்கள். ஐந்து முறை ஆழமாக, மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடுங்கள்.
பின்பு கால்விரல்களை மேலே உயர்த்தி இறுக்கிப் பிடித்து, தளர விடுங்கள். அடுத்து கால் விரல்களை கீழே இழுத்து பிடித்து பின்னர் தளர விடுங்கள்.
அடுத்து, கெண்டைக்கால் தசைகளை இறுக்கி தளர்த்துங்கள். முழங்கால்களை ஒன்றுக்கொன்று நோக்கி நகர்த்தி இறுக்கிப் பிடித்து, பிறகு விடுங்கள். பின்பு தொடைத் தசைகளை இறுக்கி தளர்த்துங்கள்.
அதன்பிறகு கைகளை இறுக்கிப் பிடித்து தளர்த்துங்கள். அடுத்ததாக பிட்டப் பகுதியில் உள்ள தசைகளை இறுக்கிப் பிடித்து, சில நொடிகள் அந்த நிலையிலேயே இருந்து பிறகு தளர்த்துங்கள். வயிற்றுத் தசைகளை சுருக்கி, இடைநிறுத்தி, பிறகு விடுங்கள். மார்புத் தசைகளை உள்ளிழுத்து இறுக்கி பிடித்து, பின்னர் மூச்சை வெளியே விடுங்கள்.
தோள்களை காதுகளுக்கு உயர்த்தி இடைநிறுத்தி, பிறகு விடுங்கள். உதடுகளை ஒன்றாக இணைத்து இறுக்கிப் பிடித்து, பின்னர் விடுவிக்கவும். வாயை அகலமாக திறந்து வைத்து, பிறகு மூடுங்கள். கண்களை இறுக்கமாக மூடி சில நொடிகள் இருந்து பின்னர் தளர்த்துங்கள். புருவங்களை உயர்த்தி பிடித்து, பின்னர் விடுவிக்கவும்.
தசைகளை இறுக்கும்போது மூச்சை ஆழமாக உள்ளிழுக்கவும், ஓய்வெடுக்கும்போது முழுமையாக மூச்சை வெளியேற்றவும்.