‘கர்ப்பகால மனஅழுத்தம் குழந்தையை பாதிக்கும்’ - அனிதா பாரதி

கர்ப்ப காலம் பெண்களின் வாழ்வில் மகிழ்ச்சியான மற்றும் உற்சாகமான தருணமாகும். அதேசமயத்தில் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் தங்களைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளால், கர்ப்ப காலத்தில் மனஅழுத்தம், கோபம், பயம், பதற்றம், குழப்பம் போன்ற உணர்வுகள் பெண்களுக்கு ஏற்படும். தகுந்த ஆலோசனைகள் பெறுவதன் மூலம் இவற்றில் இருந்து வெளிவர முடியும்.

Update: 2022-03-21 05:30 GMT
வேலூரைச் சேர்ந்தவர் அனிதா பாரதி. ரசாயன பொறியியல் துறையில் பட்டப்படிப்பை முடித்து இருக்கிறார். பத்து வருட காலம் கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரிந்த இவரது வாழ்க்கை, முதல் குழந்தையை கருவில் சுமந்தபோது மாறியது. கர்ப்ப காலத்தில், குழந்தை பிறப்பு மற்றும் குழந்தை வளர்ப்பு பற்றி தெரிந்து கொள்வதற்காக தனது தேடலை ஆரம்பித்தார். அதைத்தொடர்ந்து அவர் அறிந்து கொண்ட பல விஷயங்கள் அவரை ஆச்சரியப்படுத்தின.

அவற்றை தன்னைப் போன்ற மற்ற பெண்களுக்கும் தெரியப்படுத்துவதற்காக குழந்தை பிறப்பு பயிற்சியாளருக்கான படிப்பை முடித்தார். 2018-ம் ஆண்டு தனது மையத்தைத் தொடங்கினார். அதன் மூலம் கர்ப்பிணிகளுக்கும், புதிதாக குழந்தை பெற்ற பெற்றோர்களுக்கும், குழந்தை பிறப்பு மற்றும் குழந்தை வளர்ப்பைப் பற்றி கற்பிக்கவும், ஊக்கம் கொடுக்கவும் ஆரம்பித்தார். இதுவரை இவரது வழிகாட்டுதல் மூலம் பலர்  பயனடைந்துள்ளனர். இதுகுறித்த தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார் அனிதா பாரதி.

“நான் இயற்கையான முறையில் தாய்மை அடைவது பற்றி பெண்களுக்கு விரிவான விளக்கங்களை வழங்குகிறேன். என்னுடைய நோக்கம், பெண்கள் இயற்கையான முறையில் மகப்பேறு பெற வேண்டும் என்பதுதான். கர்ப்ப காலம் மற்றும் பிரசவம் தொடர்பான பிரச்சினைகளுக்கு, பதற்றம் அடையாமல் தீர்வு காண்பது பற்றி அறிவுறுத்துகிறேன். தாய்மையடைந்த பெண்கள் மூன்றாவது மாதம் முதல் எட்டாவது மாதம் வரை எவ்வாறு செயல்பட வேண்டும்? கர்ப்ப காலத்தில் என்னென்ன உணவுகளைச் சாப்பிட வேண்டும்? கருவை சுமக்கும் காலத்தில் மனநிலையை எவ்வாறு வைத்துக்கொள்ள வேண்டும்? கர்ப்பிணியின் செயல்களால் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை அடைய இருக்கும் நன்மை மற்றும் தீமைகள் என்ன? கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டிய ஆசனங்கள் மற்றும் பயிற்சிகள் எவை? பிரசவம் எளிதாக நடைபெற என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றியும் கற்றுக் கொடுக்கிறேன்.



குழந்தை வளர்ப்பு என்பது அற்புதமான கலை. அதை நாம் எப்படி கையாள வேண்டும்? அதாவது எப்படி தாய்ப்பால் கொடுக்க வேண்டும், தாய்ப்பால் போதுமான அளவு சுரக்க என்ன செய்ய வேண்டும்? குழந்தைகளுக்கு தேவையான சத்தான உணவு முறைகள், கற்பித்தல் முறைகள், குழந்தைகளின் மன எண்ணங்கள் பற்றி அறியவும்  பெற்றோர்களுக்கு கற்றுக் கொடுக்கிறேன். குழந்தை பிறந்தது முதல் 10 வயது ஆகும் வரை, நல்ல முறையில் வளர்க்க என்னென்ன செய்ய வேண்டும்? என ஆலோசனை அளிக்கிறேன்.

உங்கள் பயிற்சி முறை பற்றி கூறுங்கள்?
பங்கேற்பாளர்கள் தங்களது இலக்கை நோக்கி உற்சாகத்துடன் செல்லவும், நேர்மறையாக செயல்படவும், ஆரோக்கியமாக மற்றும் மகிழ்ச்சியாக இருக்கவும் உதவி செய்கிறேன். நான் பயிற்சி கொடுக்க தொடங்கிய சமயத்தில் ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்தேன். வகுப்பை தொடங்குவதற்காக தினமும் காலை 4 மணிக்கு எழுந்து என் வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு, உற்சாகத்துடன் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தேன். வகுப்பில் கலந்து கொள்பவர்கள் என்னைப் பார்த்து மேலும் உற்சாகத்தோடு செயல்படுவார்கள்.

உங்கள் மனதை நெகிழச் செய்த தருணம் எது?
குழந்தை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு பற்றி ஒவ்வொரு முறையும் மற்றவர்களிடம் பேசும்போதும் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு முறை வகுப்பு எடுக்கும்போது, கர்ப்பிணி பெண்ணுடன் துணைக்கு வந்த உறவுக்கார பெண் அழுது விட்டார். என்னவென்று கேட்டதற்கு, ‘நான் கர்ப்ப காலத்தில் மனஅழுத்தத்துடன் இருந்ததால், எனது குழந்தைக்கும் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது எனக்கு இதுபோன்ற ஆலோசனை வகுப்புகளைப் பற்றிய விழிப்புணர்வு கிடையாது’ என்றார். இதை கேட்டபோது, ‘நான் பல குழந்தைகள் ஆரோக்கியமாக பிறந்ததற்கு காரணமாக இருந்திருக்கிறேன்’ என்ற மகிழ்ச்சி ஏற்பட்டது.

கர்ப்ப காலத்தில் பெண்கள் எத்தகைய மனம் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்?
கர்ப்ப காலம் பெண்களின் வாழ்வில் மகிழ்ச்சியான மற்றும் உற்சாகமான தருணமாகும். அதேசமயத்தில் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் தங்களைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளால், கர்ப்ப காலத்தில் மனஅழுத்தம், கோபம், பயம், பதற்றம், குழப்பம் போன்ற உணர்வுகள் பெண்களுக்கு ஏற்படும். தகுந்த ஆலோசனைகள் பெறுவதன் மூலம் இவற்றில் இருந்து வெளிவர முடியும்.

நீங்கள் பெண்களுக்கு கூற விரும்புவது என்ன?
பெண்கள் சுய மரியாதையுடன் வாழ வேண்டும். தங்களுடைய நிதித் தேவைகளுக்காக யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது.

தங்களுக்கு உறுதுணையாக இருந்து சாதிக்க வைத்தது யார்?
என் குடும்பத்தினர் எனக்கு உறுதுணையாக இருந்தனர். நான் துவண்டு போகும் தருணங்களில் மீண்டு வர உதவி புரிந்தனர். என் மகன், நான் சாதிக்க முக்கிய காரணமாக இருந்தான். நான் வேலையில் ஈடுபட்டிருக்கும்போது என்னை தொந்தரவு செய்ய மாட்டான். சிறு வயதில் இருந்து பொறுப்புடன் செயல்படுவான். என்னை மிகவும் புரிந்து கொண்டவன். 

மேலும் செய்திகள்