ஆன்லைனில் பர்னிச்சர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை
பர்னிச்சர்கள் வாங்குவதற்கு முன் வீட்டில் அவற்றை வைப்பதற்கான இடத்தையும், நாம் வாங்க நினைக்கும் பொருளின் அளவையும் ஒப்பிட்டுப்பார்த்து தேர்ந்தெடுப்பது நல்லது.
வீட்டிற்குத் தேவையான சோபா, கட்டில், நாற்காலி, மர ஊஞ்சல், மர பீரோக்கள், டைனிங் டேபிள் போன்றவற்றை வாங்கும் முன்பு, ஒன்றுக்கு இரண்டு முறை இணையதளங்களில் அவற்றின் விலையை ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியமாகும்.
வழக்கமாக பொருட்கள் வாங்கும் முன்னணி தளங்களைவிட, பர்னிச்சர்களுக்கென்றே இருக்கும் இணையதளங்களில் வாங்குவது சிறப்பானதாக அமையும்.
நேரடியாகச் சென்று வாங்கும்பொழுது பர்னிச்சர்களின் தரம் பார்த்து வாங்கலாம். ஆனால் ஆன்லைனில் வாங்கும்போது அதற்கான வாய்ப்புகள் இருக்காது. எனவே பொருட்கள் வாங்கும் முன்பு அவற்றை முழுவதும் சரி பார்த்துக்கொள்வது அவசியமானது.
பர்னிச்சர்கள் வாங்கும்போது அவற்றின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைக் கவனமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த நிபந்தனைகளில் வாங்கிய பொருட்களில் ஏதேனும் உடைந்து இருந்தாலும் அல்லது தவறான பொருள் வந்துவிட்டாலும் திருப்பி அளிக்கும் வசதி இருக்கிறதா என்று தெரிந்துகொள்வது முக்கியமானது.
சம்பந்தப்பட்ட இணையதளத்தில், ஏற்கனவே பொருளை வாங்கியவர்களின் கருத்தை முழுவதுமாகப் படித்துத் தெரிந்துகொண்டு, நாம் தேர்ந்தெடுத்த பொருள் குறித்து மதிப்பாய்வு செய்துகொள்ள வேண்டும்.
பர்னிச்சர்கள் வாங்குவதற்கு முன் வீட்டில் அவற்றை வைப்பதற்கான இடத்தையும், நாம் வாங்க நினைக்கும் பொருளின் அளவையும் ஒப்பிட்டுப்பார்த்து தேர்ந்தெடுப்பது நல்லது.
இணையதளங்களில் பொருட்களைக் கொண்டு வந்து சேர்ப்பதற்கான டெலிவரி கட்டணம் எவ்வளவு என்பதை, முதலிலேயே கவனமாகப் பார்த்துக்கொள்வது அவசியம். சில இணையதளங்களில் டெலிவரி கட்டணம் அதிகமாக இருக்கும்.
பர்னிச்சர்கள் வாங்குவதற்கு முன்பு விழாக்காலங்களில் அறிவிக்கப்படும் சலுகை விலையையும், அதற்கு முந்தைய விலையையும் ஒப்பிட்டுப் பார்க்கவும். மாதத் தவணை வசதிகளைச் சரியாகத் தெரிந்து கொண்டு தேர்வு செய்ய வேண்டும்.
பர்னிச்சர்களின் நிறங்களைத் தேர்வு செய்யும்போது, அறைகளின் வண்ணங்களுக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுப்பது அவசியமாகும். அவற்றின் வடிவமைப்பு அழகாய் இருப்பினும், அறைகளின் வண்ணத்திற்கு பொருந்தாமல் போய்விடலாம். எனவே அவற்றையும் கருத்தில் கொண்டு பொருட்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
இணையதளங்களில் இடம்பெற்றுள்ள பொருளின் படத்திற்கும், நேரில் பார்ப்பதற்கும் பல வித்தியாசங்கள் இருக்கும். எனவே கவனமாக தேர்வு செய்ய வேண்டும்.
வாங்கும் பொருட்களுக்கான வாரண்டி குறித்து தெளிவாகத் தெரிந்துகொண்டு, பின்னர் ஆர்டர் செய்வது சிறந்தது.