இப்படிக்கு தேவதை

டாக்டர் சங்கீதா மகேஷ், உளவியல் நிபுணர். உளவியல் தொடர்பான முதுகலை படிப்பில் தங்கப்பதக்கம் பெற்றவர். பல மாநாடுகளில் கலந்துகொண்டு அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். அனைத்து தரப்பினருக்கும் மனநலம் தொடர் பான ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.

Update: 2022-02-28 05:30 GMT
1. நான் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். திடீரென ஏற்பட்ட விபத்தால்  எனது இடது காலில் அடிபட்டது. மருத்துவ சிகிச்சைகளின் மூலம் குணமடைந்தேன். இருந்தபோதும் பழைய மாதிரி நடக்க முடியவில்லை. என்னுடன் வேலை செய்யும் பெண் ஒருவர், அவருடைய தோழிகளிடம் எனது நடையைக் காட்டி கேலி கிண்டல் செய்து வருகிறார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது, அவர் எதுவும் தெரியாதது போல் “நான் உன்னை கேலி செய்யவில்லை” என்று பதில் சொல்கிறார். ஆனால் தொடர்ந்து கேலி செய்து வருகிறார். இதனால் நான் மிகுந்த மன வருத்தத்துடன் இருக்கிறேன். அவரை எப்படி எதிர்கொள்வது என்று எனக்குத் தெரியவில்லை. நான் என்ன செய்ய வேண்டும் என கூறுங்கள்.
இயலாமை காரணமாக கேலி செய்யப்படுவதால், நீங்கள் அனுபவிக்கும் வலியை என் னால் உணர முடிகிறது. ஆனால் இதற்காக நீங்கள் வருத்தப்படுவது, உங்களை கேலி செய்பவர்களை மேலும் ஊக்குவிப்பது போல ஆகி விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் குறை என்பது உங்களுடைய வாழ்வின் ஒரு பகுதி மட்டும்தான்; அதுவே உங்கள் அடையாளம் இல்லை என்பதை நீங்கள் உலகுக்கு உணர்த்த வேண்டும். உங்களின் திறன்கள், நல்ல குணங்கள், அணுகுமுறை போன்றவற்றை மேம்படுத்திக் கொள்ளுங்கள். அவற்றின் மூலம் நீங்கள் யாரென்று மற்றவர்களுக்கு உணர்த்துங்கள். இவ்வளவு சிரமங்களுக்கு இடையிலும் நீங்கள் மீண்டும் வேலைக்குச் செல்வதை நினைத்து பெருமை கொள்ளுங்கள். உங்களுடைய நிறைகளைப் பார்க்காமல், குறைகளைப் பார்ப்பது அவர்களது குறையாகும். இதில் நீங்கள் வருத்தப்பட வேண்டியது எதுவும் இல்லை. தடைகளைத் தாண்டி முன்னேறுங்கள்.

2. என் மகள் எம்.பி.ஏ., படித்திருக்கிறாள். வேலைக்குப் போகவில்லை. தினமும் வீட்டில் சண்டை போடுகிறாள். மனநல மருத்துவரிடமும் கூட்டிச்சென்று ஆலோசித்தேன். வெளியில் செல்ல வும், வெளியாட்களிடம் பேசவும் பயப்படுகிறாள். சமீபத்தில் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றாள். அவளுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். இது தொடர்பாக உங்கள் ஆலோசனையை வேண்டுகிறேன்.
இந்த நிலையில் உங்கள் மகளுக்கு திருமணம் செய்து வைப்பது நல்ல முடிவாகத் தெரியவில்லை. திருமண வாழ்வை வெற்றிகரமாகக் கொண்டு செல்லும் மனநிலையில் அவர் இல்லை என்பது தெரிகிறது. உடல் மற்றும் மன அளவில் அவர் தயாராக இல்லாதபோது, அவரை திருமண வாழ்வில் ஈடுபடுத்துவது உங்களுக்கும் மனஅழுத்தத்தை அதிகரிக்க செய்யும். அவர் தற்போது திருமண வாழ்க்கைக்கு தகுதியாக இருக்கிறாரா? என்பதை அவருக்கு சிகிச்சை அளிக்கும் மனநல மருத்துவரிடம் ஆலோசியுங்கள். தனி ஒருவராக சமுதாயத்தை எதிர்கொள்வதற்கு அவர் மனதளவில் தயாராக வேண்டும். அதற்கான சிகிச்சைகளை அவருக்கு முதலில் அளியுங்கள். 



வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். தங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
அனுப்ப வேண்டிய முகவரி: 
‘தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி’, 
தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, 
சென்னை - 600007. 
மின்னஞ்சல்: devathai@dt.co.in

மேலும் செய்திகள்