குழந்தைகளுக்கு பணம் குறித்த அறிவை வளர்ப்பது எப்படி?

பணத்தைச் சேமிக்க வேண்டும் என்பதை சிறு வயதில் இருந்தே அவர்களுக்குக் கற்பிப்பது முக்கியம். சேமிப்பு, இலக்கு நிர்ணயம் மற்றும் திட்டமிடல் ஆகியவற்றைக் கற்றுக்கொடுக்கிறது. பாதுகாப்பையும், சுதந்திரத்தையும் உருவாக்குகிறது.

Update: 2022-02-14 05:30 GMT
ன்றாகப் படித்து, நல்ல வேலையில் இருக்கும் ஒருவரால் முழுமையான பொருளாதார சுதந்திரத்தை எட்ட முடியாமல் போகிறது. அதே சமயம் சுமாராகப் படித்து, நிச்சயம் இல்லாத பணியில் இருக்கும் ஒருவரால் பொருளாதார வசதிகளோடு வாழ முடிகிறது. இதற்கான காரணம், பணத்தை கையாளுவதற்கான அடிப்படை, அவர்களுடைய குழந்தைப் பருவத்திலேயே தொடங்கியிருக்கும் என்பதே. குழந்தைகளுக்கு கல்வியோடு, பணம் குறித்த அறிவை வளர்ப்பதும்  முக்கியமானது. அதற்கான சில வழிகள்:

இளம் வயதிலேயே தொடங்குங்கள்
குழந்தைகள் 8 வயதாகும்போது ஓரளவுக்கு இந்த உலகம் எப்படி இயங்குகிறது என்பதைப் புரிந்துகொள்ளத் தொடங்குவார்கள். அப்போது அவர்களுக்குப் பணத்தை அறிமுகப்படுத்த வேண்டும். பணம் என்றால் என்ன, அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை விளக்குங்கள். பணம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் காண்பிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, கடைக்கு செல்கையில் கவுண்டரில் பணம் கொடுக்கும்போது, குழந்தைகளை அருகில் வைத்துக்கொண்டு கற்றுக்கொடுங்கள். இது பணம் குறித்த அடிப்படையை குழந்தைகளுக்குப் புரிய வைக்கும்.

சேமிக்கும் பழக்கம்
பணத்தைச் சேமிக்க வேண்டும் என்பதை சிறு வயதில் இருந்தே அவர்களுக்குக் கற்பிப்பது முக்கியம். சேமிப்பு, இலக்கு நிர்ணயம் மற்றும் திட்டமிடல் ஆகியவற்றைக் கற்றுக்கொடுக்கிறது. பாதுகாப்பையும், சுதந்திரத்தையும் உருவாக்குகிறது.

உண்டியல் கொடுப்பதன் மூலம் உங்கள் குழந்தைகளுக்கு சேமிக்கும் பழக்கத்தைக் கற்றுத்தரலாம். எதிர்காலத்திற்காக அல்லாமல், அவர்கள் விரும்பும் பொம்மை வாங்குவது போன்ற குறுகிய கால இலக்குகளுக்காக சேமிக்கக் கற்றுக்கொடுக்கலாம்.

பெற்றோரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் வங்கி அல்லது அஞ்சல் அலுவலகச் சேமிப்புக் கணக்கையும் அவர்களுக்குத் தொடங்கித் தரலாம். இதன் மூலம் அவர்களது சேமிப்பு, வட்டியின் மூலம் பெருகும் வழியையும் காட்டலாம்.

பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குங்கள்
பிள்ளைகளுக்கென்று சில பொறுப்பான பணிகளை வீட்டில் கொடுங்கள். அதைச் செய்து முடிக்கும்போது மட்டும், அவர்களுக்குப் பாக்கெட் மணி கொடுங்கள். அதுதான் அவர்களின் சம்பளம். ஒவ்வொரு மாதமும் சம்பளத்தை சரியான நேரத்துக்கு அவர்களுடைய வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யுங்கள். இதன் மூலம் எந்தவொரு கெட்ட பழக்கத்தின் பின்பும் உங்கள் குழந்தைகள் செல்ல மாட்டார்கள். சரியானமுறையில்  செலவு செய்வது எப்படி என்று அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். 

உதவி செய்வதற்கு ஊக்கப்படுத்துங்கள்
பிறருக்கு உதவுவதைப் பழக்கமாக மாற்றி அந்த மதிப்பை வளர்க்கலாம். பிறந்த நாள் அல்லது பண்டிகை நாட்களில் குறிப்பிட்ட உதவிகளைச் செய்யும்படி உங்கள் குழந்தைகளை ஊக்கப்படுத்துங்கள். கொடுப்பதன் மூலமாக பணத்தின் மதிப்பை அவர்கள் புரிந்துகொள்வார்கள்.

பணம் பெருகும் என்பதைக் கற்றுக்கொடுங்கள்
பணத்தை சேமிப்பது மட்டுமில்லாமல், முதலீடு செய்வது பற்றியும் அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். முதலீடு செய்வது சரியாகப் புரியவில்லை என்றால், அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்கும் புத்தகத்தை உங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். 

மேலும் செய்திகள்