சகோதரிகளிடையே போட்டித்தன்மையை நீக்குவது எப்படி?

வீட்டில் நிலவும் அண்ணன்-தம்பி, அக்கா-தங்கை, அண்ணன்-தங்கை, அக்கா-தம்பி சண்டைகளை தவிர்ப்பது எப்படி. இந்த கட்டுரை வழிகாட்டுகிறது.

Update: 2022-02-07 05:30 GMT
டன் பிறந்த சகோதரிகளுக்குள் சண்டையும், போட்டித்தன்மையும் அனைத்து வீடுகளிலும் நடப்பதுதான். ஒருவர் சரி என்று சொல்லும் கருத்தை, இன்னொரு சகோதரி தவறு என்று கூறுவார். இருவருக்கும் இடையில் மாட்டிக் கொள்ளும் பெற்றோர்கள், அந்த போட்டித்தன்மையை போக்குவதற்கான டிப்ஸ் இங்கே…

1) இருவருக்கும் நேரம் ஒதுக்குங்கள்:
பெற்றோருடன் நேரம் செலவிடாததன் காரணமாகவும் சகோதரிகளிடையே போட்டித்தன்மை உண்டாகலாம். எனவே பெற்றோர் எவ்வளவு வேலை இருந்தாலும், தங்கள் பிள்ளைகளிடம் போதிய நேரம் செலவிட வேண்டும். இதனால், அவர்களின் மன நிலையையும் அறிந்துகொள்ள முடியும்; போட்டி தன்மையையும் குறைக்க முடியும்.

2) ஒப்பிடுதல் வேண்டாம்:
பெற்றோர் தங்கள் மகள்கள் படிப்பிலும், போட்டியிலும், விளையாட்டிலும் ஏதேனும் தவறு செய்தால் ஒருவரை மற்றவரோடு ஒப்பிட்டு பேசுவார்கள். இளைய மகள் தவறு செய்தால், “பெரியவளைப் பார்த்து கற்றுக்கொள்; அதே மாதிரி சரியாக செய்யவேண்டும்” என்று கூறுவார்கள். இது இளைய மகள் மனதில் போட்டித் தன்மையை அதிகரிக்கும். “என்னை விட, அவளைத்தான் உங்களுக்கு பிடிக்கும்” என்ற எண்ணம் சிறுவயதில் இருந்து அவள் மனதில் வளர ஆரம்பித்து விடும். எனவே இருவரில் யார் தவறு செய்தாலும் ஒப்பிட்டுப் பேசாமல், “நீ சிறப்பாக செய்தாய்; இன்னும் முயற்சி செய்தால்  நன்றாக செய்யலாம்” என்று அவர்களை உற்சாகப்படுத்துங்கள்.

3) தனித்தன்மையை பாராட்டுங்கள்:
“நீங்கள் இருவருமே எங்களுக்கு ஒன்றுதான்” என்று வார்த்தைகளால் கூறாமல், அவர்கள் இருவரின் தனித்தன்மையை பாராட்டுங்கள். இருவருக்கும் ஒரே மாதிரியான திறமைகள் இருக்கும் என்று கூற முடியாது. உதாரணத்திற்கு, மூத்த மகளுக்கு இசையில் திறமை இருக்கும். அதேபோல், இளைய மகள் வரைவதில் திறமை கொண்டிருக்கலாம். அவர்கள் இருவரின் தனித்திறமையை பாராட்டி, அவ்வப்போது சிறிய பரிசுகளும் வழங்குங்கள். இதன் மூலம், இருவருமே சமமாக நடத்தப்படுகிறார்கள் என்ற எண்ணம் அவர்களிடம் ஏற்படும்.

4) எண்ணங்களுக்கு மதிப்பு கொடுங்கள்:
சகோதரிகள் சண்டையிடுவது ஏதேனும் காரணத்திற்காக இருக்கலாம். பெற்றோர்கள் அந்த காரணத்தை விசாரிக்காமல் இருவருக்கும் தண்டனை கொடுப்பதும் அல்லது ஒரு மகளிடம் மட்டும் காரணத்தைக் கேட்டு இன்னொருவருக்கு தண்டனை கொடுப்பதும் இருவரிடையே இடைவெளியை ஏற்படுத்தும். போட்டித் தன்மையையும் அதிகரிக்கும். அதனால், இருவரின் எண்ணங்களுக்கும் சமமாக மதிப்பு கொடுக்க வேண்டும்.

5) செல்லமான கட்டுப்பாடுகள்:
சரியோ, தவறோ பெற்றோர்கள் என்ன கூறுகிறார்களோ? அதுதான் குழந்தைகள் மனதில் பதிந்து வளரும். பெற்றோர்கள் தங்கள் மகள்களிடம் “ஆரோக்கியமான போட்டித்தன்மை இருக்கலாம். ஆனால், பொறாமை இருக்கக்கூடாது” என்று சிறுவயது முதலில் சொல்லிக் கொடுக்க வேண்டும். விளையாட்டான கேலிகளும், இன்னொரு சகோதரியின் மனதில் அதிகமான காயத்தை ஏற்படுத்தும் என்பதை இருவருக்கும் புரிய வைத்து, சில கட்டுப்பாடுகளை செல்லமாக விதிக்கலாம்.

சகோதரிகளிடம் போட்டி தன்மை இருப்பது இயல்பானதே; அது ஆரோக்கியமானதாக இருப்பது நல்லது. எப்போதாவது அவர்கள் சண்டையிட்டாலும், பெற்றோர்கள் அவர்களை மனம் விட்டுப் பேச வைத்தால் சகோதரிகள் இருவருமே சிறந்த நண்பர்களாக இருப்பார்கள். 

மேலும் செய்திகள்