மணமுறிவைத் தடுக்கும் வழிமுறைகள்

அன்பு, பாசம், குடும்பம் என்ற கட்டமைப்பு இல்லாமல், சாதாரண காரணங்களுக்காகக்கூட விவாகரத்து வரை செல்கிறார்கள்.;

Update: 2021-10-18 12:03 GMT
‘ஆயிரம் காலத்து பயிர்’ என பெரியவர்கள் கூறிய திருமண பந்தத்தில் இணையும் பலர் சரியான புரிதலும், விட்டுக் கொடுத்தலும் இல்லாத காரணத்தால் ‘விவாகரத்து’ செய்வது அதிகரித்து 
வருகிறது. இதற்கான காரணங்களையும், மணமுறிவைத் தடுப்பதற்கான வழிமுறைகளையும் கூறுகிறார், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் நித்யவதி. 

“திருமணமான மூன்றே மாதங்களில் விவாகரத்து கேட்டு வருபவர்கள் முதல், முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து வாழ்ந்து, 60 வயதுக்கு மேல் விவாகரத்து கேட்டு வருபவர்கள் வரை பல விவாகரத்து வழக்குகளை தினமும் சந்திக்கிறோம். 

அன்பு, பாசம், குடும்பம் என்ற கட்டமைப்பு இல்லாமல், சாதாரண காரணங்களுக்காகக்கூட விவாகரத்து வரை செல்கிறார்கள். 



வசதியாக வாழ வேண்டும் என்பதற்காகப் ‘பணம் சம்பாதிப்பது ஒன்றே இலக்கு’ என்று பலர் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். குழந்தை பெற்றுக் கொள்வதைக் கூட பெரும் சுமையாக நினைத்து, தள்ளிப் போடுகிறார்கள். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்வதும், விட்டுக்கொடுப்பதும் இல்லாமல் போய்விட்டது. 

அந்தக் காலத்தில், ‘புகுந்த வீட்டில் ஏதேனும் பிரச்சினை இருந்தாலும் நீதான் அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும்’ என்று பெண்ணிடமும், ‘பிறந்த வீட்டையும், உறவுகளையும் விட்டு உன்னை மட்டுமே நம்பி வருபவளை நீதான் கண் கலங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்று ஆணிடமும் அறிவுரை சொல்லி வளர்ப்பார்கள். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் ஏராளமான மணமுறிவுக்குப் பெற்றோரே காரணமாக இருக்கிறார்கள். ‘என் பிள்ளை ஏன் பொறுத்துப் போக வேண்டும்?’ என்று கேட்கிறார்கள்.

மணமுறிவைத் தடுக்கும் வழிமுறைகள்…

தனக்கு வாழ்நாள் துணையாக முடிவு செய்யப்பட்டிருக்கும் பெண்ணையோ, ஆணையோ முழுமனதோடு பிடித்திருக்கிறதா? என்பதை உறுதி
படுத்திக்கொண்டு திருமணம் செய்ய வேண்டும். 

இயன்றவரை விரைவாகக் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். அந்தக் குழந்தையே இருவருக்கும் இடையேயான அன்புப் பாலத்தைக் கட்டமைக்கக் காரணமாக அமைந்துவிடும். 



ஒவ்வொருவரும் தனது வாழ்க்கைத் துணையின் இடத்தில் இருந்து யோசித்து, அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்வதற்கு முயற்சிக்க வேண்டும். பிரச்சினைகளை பொறுமையாக அணுகி, ஒருவருக்கொருவர் மனம்விட்டுப் பேச வேண்டும்.

சண்டையைத் தூண்டிவிடுபவர்கள் பெற்றோராக இருந்தால், உங்கள் விஷயத்தில் அவர்கள் தலையிட அனுமதிக்கவே கூடாது. 

‘வசதியாக வாழ்வதைவிட, நிம்மதியாக வாழ வேண்டும்’ என்ற தெளிவு வேண்டும். 

அலுவலகத்தில் மேலதிகாரியிடம் பொறுமையோடு நடந்து கொள்பவர்கள், வாழ்க்கைத் துணையிடம் சற்றே பொறுமையோடு நடந்துகொண்டால் பிரச்சினையே வராது. வெளியிடங்களில் மற்றவர்களை வெல்ல நினைக்கலாம். ஆனால் வாழ்க்கைத் துணையிடம் விட்டுக்கொடுத்துத் தோற்றுப் போகும்போது தான் இல்லறம் இனிமையாகும். 

மணமுறிவுக்குப் பின்பு மறுமணம் செய்தாலும், அப்போதும் நிறைய விஷயங்களில் அனுசரித்துதான் செல்ல வேண்டிஇருக்கும். அதை இப்போதே செய்தால் விவாகரத்துக்கு அவசியம் இருக்காது” என்கிறார் நித்யவதி.

மேலும் செய்திகள்