உலக வறுமை ஒழிப்பு தினம்
கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி போன்றவற்றில் தன்னிறைவை அடையும்போது ‘வறுமை ஒழிப்பு’ சாத்தியமாகும்.
‘கொடிது கொடிது வறுமை கொடிது’ என்பார்கள். வாழ்வியல் பிரச்சினைகள் அனைத்துக்கும் ஆரம்பப் புள்ளியாக வறுமை இருக்கிறது. பொருளாதார ரீதியான தட்டுப்பாட்டை மட்டுமே ‘வறுமை’ என வரையறுக்க முடியாது.
ஏழ்மை நிலை என்பது உணவு, சுத்தமான நீர், உடை, தங்குமிடம், கல்வி, சுகாதாரம், சமூக வாய்ப்புகள், அடிப்படையான மனித அரசியல் உரிமைகள் ஆகிய நிலைகளை உள்ளடக்கியது.
உலக வங்கியின் தரவுகளின்படி 1.4 பில்லியன் மக்கள் வறுமைக்கோட்டின் அடிமட்டத்தில் வாழ்கின்றார்கள். உலக அளவில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி, பசிக் கொடுமையில் இருந்து
மக்களை விடுவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபை 1992-ம் ஆண்டு அக்டோபர் 17-ந் தேதியை ‘உலக வறுமை ஒழிப்பு தினமாக’ அறிவித்தது.
மேலும், 2030-ம் ஆண்டுக்குள் ஏழ்மையை ஒழிக்க வேண்டும் என்ற தொலைநோக்கு வளர்ச்சிக்கான இலக்கையும் நிர்ணயித்தது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 17-ந் தேதி உலகம் முழுவதும் ‘உலக வறுமை ஒழிப்பு தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது.
மக்கள் ஏழ்மையில் வாழும் நாடுகளின் பட்டியலில், இந்தியாவும் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. வறுமை ஒழிப்பு என்பது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கியமான செயல்பாடாகும்.
ஒவ்வொரு தனிமனிதனின் முன்னேற்றமே நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி போன்றவற்றில் தன்னிறைவை அடையும்போது ‘வறுமை ஒழிப்பு’ சாத்தியமாகும். திட்டமிட்டு செயல்படுவோம். அடுத்த தலைமுறைக்கு வறுமையிலிருந்து மீண்டு வந்த ஓர் உன்னதமான சூழலைப் பரிசளிப்போம்.