தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்: செப்டம்பர் 30ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலை செப்டம்பர் 30ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-05-22 08:57 GMT
சென்னை, 

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த 2019 ஏப்ரல் 30-ம் தேதியுடன் முடிவடைந்ததால் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள மாவட்டப் பதிவாளரான என்.சேகர் என்பவரை தனி அதிகாரியாக தமிழக வணிகவரித்துறை நியமித்தது.

தனி அதிகாரியின் நியமன உத்தரவை ரத்து செய்யக் கோரி தயாரிப்பாளர் சங்க முன்னாள் தலைவர் விஷால் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தனி நிர்வாகியின் நியமனத்துக்குத் தடை விதிக்க மறுத்து விட்டது.

மேலும், தயாரிப்பாளர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், ஜூன் 30ம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும், ஜூலை 30 ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சிறப்பு அதிகாரியான ஒய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில், ஜூன் 30 என்கிற தேர்தல் காலக்கெடுவை நீட்டிக்கக்கோரி தயாரிப்பாளர் சங்கம் தொடர்ந்த வழக்கில், “தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும், அதுகுறித்து சிறப்பு அதிகாரி அக்டோபர் 30 ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்