ரிப்பப்பரி: சினிமா விமர்சனம்
பேய் ஏன் இப்படி சாதிவெறி பிடித்து அலைகிறது? என்பதே படத்தின் கதை.;
ஒரு கிராமத்தில் சாதிமாறி காதலித்து திருமணம் செய்துகொள்ள முயற்சிக்கும் ஆண்கள் அடுத்தடுத்து கொல்லப்படுகின்றனர். இந்தக் கொலைகளை செய்வது சாதிவெறி பிடித்த பேய் என்று போலீஸ் நம்புகிறது. ஆனாலும் அந்தப்பேயாக திரிவது யார்? எதற்காகக் கொலைகளை செய்கிறது என்பதை கண்டுபிடிக்கமுடியாமல் போலீசார் திணறுகின்றனர்.
யூடீயூப் சேனலில் சமையல் குறிப்பு வீடியோக்களை பகிரும் மாஸ்டர் மகேந்திரனுக்கும் பேய் ஊரைச்சேர்ந்த பெண்ணோடு வலைத்தளம் மூலம் நட்பு ஏற்பட்டு காதல் மலர்கிறது. காதலியை நேரில் சந்திக்க நண்பர்களுடன் அந்தக்கிராமத்துக்கு செல்கிறார். இதனால் அவருக்கும் பேயால் ஆபத்து நேர இருக்கிறது.
அதில் இருந்து தப்பித்து காதலியோடு சேர்ந்தாரா" பேயால் கொலை செய்யப்பட்டவர்களின் பின்னணி என்ன என்பது மீதிக்கதை
மாஸ்டர் மகேந்திரனுக்கு சீரியஸ் முகத்துடன் நகைச்சுவை செய்யும் கதாபாத்திரம். அதை சரியாகப்பயன்படுத்தி உள்ளார். நண்பர்களுடன் ஊருக்குள் ஆடு, கோழிகளை திருடி சமையல் செய்து சேனலில் வீடியோ வெளியிடுவது, காதலி வீட்டை கண்டுபிடிக்க தெருத்தெருவாக அலைவது. குரங்கு பொம்மையை வைத்து பேய் நடமாட்டத்தை அறிவது, காதலியை மணக்க பேயிடம் சம்மதம் கேட்டு கெஞ்சுவது என்று கதாபாத்திரத்தை சுவாரஸ்யப்படுத்தி உள்ளார்.
ஆரடி பொடி, காவ்யா இருவரும் சிறிதுநேரம் வந்தாலும் தேவையான நடிப்பை கொடுத்துள்ளனர். நோபில் கே.ஜேம்ஸ், மாரி ஆகியோர் சிரிப்பும் முறைப்புமாக காட்சிகளை கலகலப்பாக நகர்த்துகிறார்கள். ஸ்ரீனி நிறைவான நடிப்பை வழங்கி உள்ளார். பேய் ஆகாயத்தில் பறந்து வந்தும் நாயுடன் வந்தும் செய்யும் கொலைகள் திகிலூட்டுகின்றன.
பேயாக மாறியவரின் பிளாஷ் பேக் காட்சி நெகிழவைக்கிறது. அதன் நீளத்தை குறைத்து இருக்கலாம்.
சிரிக்க வைக்கும் நோக்கில் முழுப்படத்தை எடுத்துள்ள இயக்குனர் அருண் கார்த்திக், அதில் வென்றும் இருக்கிறார்.
திவாகரா தியாகராஜனின் பின்னணி இசை பேய்க்கதைக்கு வலுசேர்த்துள்ளது. தளபதி ரத்னம் கேமரா கிராமத்துக்காதல் மற்றும் திகில் காட்சிகளை அம்சமாக படம்பிடித்து உள்ளது.