மெய்ப்பட செய் : சினிமா விமர்சனம்

Update:2023-01-29 08:32 IST

தஞ்சை பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் நண்பர்களுடன் வேலையில்லாமல் ஊர் சுற்றுகிறார் ஆதவ் பாலாஜி. இவருக்கும், அதே கிராமத்தில் வசிக்கும் மதுனிகாவுக்கும் காதல் மலர்கிறது.

இவர்கள் காதலை மதுனிகாவின் தாய்மாமன் பி.ஆர்.தமிழ் செல்வம் எதிர்க்கிறார். இதனால் காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டு நண்பர்கள் மூன்று பேருடன் ஊரை விட்டு வெளியேறி சென்னை வருகிறார்கள்.

சென்னையில் வீடு வாடகைக்கு எடுத்து தங்குகிறார்கள். அந்த வீட்டு உரிமையாளரின் மகனால் ஒரு பெரிய பிரச்சினையில் அவர்கள் சிக்குவதும், அதை எதிர்கொண்டு மீண்டார்களா? என்பதும் மீதி கதை..

ஆதவ் பாலாஜி கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். காதல், செண்டிமென்ட் காட்சிகளில் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். சண்டையிலும் வேகம் காட்டி உள்ளார்.

மதுனிகா வசீகரிக்கிறார். நடிப்பும் நன்றாக வருகிறது. நாயகியின் தாய்மாமனாக வரும் பி.ஆர்.தமிழ் செல்வம் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். தாதாவாக வரும் ஆடுகளம் ஜெயபால் அனுபவ நடிப்பை கொடுத்து கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்துள்ளார்.

சூப்பர் குட் சுப்பிரமணி, ராஜ்கபூர், பெஞ்சமின், பயில்வான் ரங்கநாதன் மற்றும் நாயகனின் நண்பர்களாக வருபவர்கள் அனைவரும் கதாபாத்திரங்களுக்கு உரிய அவரவர் பங்களிப்பை சரியாக செய்துள்ளனர்.

ஆரம்பத்தில் மெதுவாக நகரும் கதை பின்னர் வேகம் எடுக்கிறது. காதல் காட்சிகளில் இன்னும் ஜீவன் சேர்த்து இருக்கலாம்.

பாலியல் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனைகளை விரைந்து வழங்க வேண்டும் என்ற சமூக கருத்தை மையமாக வைத்து நேர்த்தியான காட்சி அமைப்பில் விறுவிறுப்பாக கதை சொல்லி உள்ளார் இயக்குனர் வேலன்.

பாலியல் அத்துமீறல்களுக்கு தண்டனை அளிக்க பரிந்துரைக்கும் பாணியும் வித்தியாசம்.

ஆர்.வேல் கேமரா காட்சிகளை அம்சமாக படம்பிடித்து உள்ளது. பரணியின் இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசையும் பலம்.

Tags:    

மேலும் செய்திகள்