சினிமா விமர்சனம்: காட்டேரி

இது ஒரு சிரிப்பு பேய் படம். ‘காட்டேரி’ என்பதற்கு பழைய தலைமுறையைச் சேர்ந்த மனிதர்கள், ‘மூதாதையர்கள்’ என்ற அர்த்தமும் உள்ளது.

Update: 2022-08-12 14:50 GMT

வைபவும், அவருடைய நண்பர்களும் புதையலை தேடி ஒரு கிராமத்துக்கு செல்கிறார்கள். அங்கு அவர்கள் சந்திப்பவர்கள் எல்லோரும் பேய்களாக இருக்கிறார்கள். அந்த பேய் கூட்டத்துக்கு தலைமை பேயாக 'மாதம்மா' என்ற பேய் இருக்கிறது.

மாதம்மா, ஒரு வித்தியாசமான பேய். அதனிடம் சிக்குபவர்களிடம், 'நான் அழகாக இருக்கிறேனா?' என்று கேட்கும். 'ரொம்ப அழகாக இருக்கிறாய்' என்று சொன்னால் அவ்வளவுதான். அடித்து கொன்றுவிடும் 'அழகாக இல்லை' என்று சொன்னால், தப்பிக்கலாம்.

மாதம்மாவை கடந்து சென்றால், ஒரு கிணற்றுக்குள் பிணம் தின்னும் பேய்கள் உள்ளன. கிணற்றுக்குள் பிணத்தை போட்டால், பதிலுக்கு அந்த கிணற்றில் இருந்து தங்கம், வைரம் என்று நகைகளை பேய்கள் வாரி வழங்குகின்றன. கிணற்றுக்குள் போடுகிற பிணங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, நகைகளை பேய்கள் கொடுக்கின்றன.

வைபவும், நண்பர்களும் பேய்களிடம் இருந்து நகைகளை கைப்பற்றினார்களா, இல்லையா என்பது மீதி கதை.

சிரிப்பு பேய்களின் 'சீசன்' இன்னும் முடியவில்லை என்பதை 'காட்டேரி' உணர்த்துகிறது. சிரிப்பு கதைகளுக்கு வைபவ் பொருந்தி விடுகிறார். படம் முழுக்க அவரும், சக நட்சத்திரங்களும் சிரிக்க வைக்கிறார்கள். மாதம்மா என்ற பேய் வேடத்தில், வரலட்சுமி சரத்குமார் நடித்து இருக்கிறார். அவர் தன் பெரிய கண்களை உருட்டியபடி, 'நான் அழகாக இருக்கிறேனா?' என்று கேட்கும்போது பயத்தில் சிலிர்க்கிறது.

 படத்தில், சத்தம் போட்டு சிரிக்க வைப்பவர், ரவிமரியாதான். அவருடைய நடை, உடை, பாவனை சிரிக்க வைக்கிறது. வசன உச்சரிப்பு மூலம் இன்னும் சிரிக்க வைக்கிறார். கருணாகரன், ஜான் விஜய் ஆகியோரும் கலகலப்பூட்டுகிறார்கள். கலக்கலான கவர்ச்சிக்கு சோனம் பாஜ்வா.

விக்னேஷ் வாசுவின் ஒளிப்பதிவும், பிரசாத்தின் பின்னணி இசையும் பேய் வரும் காட்சிகளில் மிரட்டி உள்ளன. பேய்களை பார்த்து படம் பார்ப்பவர்கள் சிரிக்க வேண்டும் என்ற முயற்சியில், டைரக்டர் டிகே வெற்றி பெற்றுள்ளார். இடைவேளை வரை படத்தில் வேக குறைவு. இடைவேளைக்குப்பின் விறுவிறுப்பான கதையோட்டம்.

Tags:    

மேலும் செய்திகள்