காவேரிப்பாக்கம் ஏரி சுற்றுலா தலமாக மாற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தமிழகத்திலேயே 3-வது பெரிய ஏரியான காவேரிப்பாக்கம் ஏரியை சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

Update: 2022-08-10 18:12 GMT

தமிழகத்திலேயே 3-வது பெரிய ஏரியான காவேரிப்பாக்கம் ஏரியை சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

மாநிலத்தில் 3-வது பெரிய ஏரி

தமிழகத்தை ஆண்ட பண்டைய மன்னர்கள் நீர்மேலாண்மையில் மிகுந்த அக்கறை காட்டினர் என்பதை இன்றும் காலத்தை வென்று சாட்சியம் கூறிக் கொண்டிருக்கின்றன. இதற்கு பல சான்றுகள் உள்ளன. இதில் கரிகாலன் கட்டிய கல்லணை இன்றைய தொழில்நுட்ப வல்லுனர்களையே வியப்பில் ஆழ்த்தி வருகிறது. அப்படி சிறப்புமிக்க தமிழகத்தில் கி.பி. 7-ம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மனால் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலும், தற்போது பிரிக்கப்பட்ட புதிய ராணிப்பேட்டை மாவட்டத்திலேயே மிகவும் பெரிய ஏரியாக காவேரிப்பாக்கம் ஏரி உள்ளது.

மேலும் தமிழகத்தில் மூன்றாவது பெரிய ஏரியாகவும் விளங்குகிறது. காவேரிப்பாக்கம் ஏரியின் மொத்த பரப்பளவு 3,968 ஏக்கர். இது இப்போதைய அளவு. அந்த காலத்தில் இதை விட பெரியதாக இருந்தது என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். இவ்வளவு பிரமாண்டமான ஏரிக்கு பாலாற்றின் வெள்ளமே நீராதாரமாக விளங்கி வருகிறது. இதனை பற்றிய தகவலை 19-ம் நூற்றாண்டில் இங்கிலாந்தை சேர்ந்த மிஸ்டர் பரித்ஸ்மித் என்பவர் 'தென்னிந்தியாவின் நீர்ப்பாசனம்' என்ற தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

6,278 ஏக்கர் நிலங்கள்

பாலாற்றில் இருந்து காவேரிப்பாக்கம் ஏரிக்கு நீர் வரும் வகையில் பிரமாண்டமான கால்வாய்கள் வெட்டப்பட்டிருந்தன. இவ்வாறு ஏரிக்கு வரும் தண்ணீர் நரி மதகு, சிங்க மதகு, மூலமதகு, பள்ளமதகு என 10 மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு கால்வாய்கள் மூலம் காவேரிப்பாக்கம், கொண்டாபுரம், கட்டளை, சேரிஅய்யம்பேட்டை, துரைபெரும்பாக்கம், பாணாவரம் உள்ளிட்ட 14 கிராமங்களுக்கு நேரடியாக தண்ணீர் பெறப்படுகிறது. காவேரிப்பாக்கம் ஏரி மூலம் மகேந்திரவாடி, சித்தேரி உட்பட பல சிறிய, பெரிய ஏரிகள் கால்வாய்கள் மூலம் நீரை பெற்று அந்தந்த பகுதி விவசாயத்துக்கு பாசன வசதியை பெருகின்றனர். மேலும் 6,278 ஏக்கர் பரப்பளவு வேளாண் நிலங்கள் இந்த நீரை பெறுகின்றன.

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஏரிக்கரையின் நீளம் 8.5 கிலோ மீட்டர் ஆகும். இதன் கரையின் அகலம் 3.5 மீட்டர். இக்கரையை பாதுகாக்க உள்பகுதியில் பெரிய, பெரிய பாறைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி பதிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஏரி பொதுப்பணித்துறையின் பராமரிப்பில் உள்ளது. காவேரிப்பாக்கம் ஏரிக்கு பாலாறு அணைக்கட்டில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு இருபுறமும் கருங்கற்கள் பதிக்கப்பட்ட கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு ஏரியில் நிரப்பப்படுகின்றன. இவ்வாறு ஏரி முழுமையாக நிரம்பும்போது ஏரியின் மொத்த கொள்ளளவு உயரம் சுமார் 30.65 அடியாக இருக்கும்.

ஏரியானது ஒருமுறை நிரம்பி வழிந்தால் ஓராண்டுக்கு மூன்று போகம் பயிர் செய்ய முடியும். இந்த ஏரி முழுமையாக நிரம்பி வழியும்போது ஏரியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, உபரிநீர் கடைவாசல் பகுதியில் உள்ள 57 ராட்சத மதகுகள் மூலம் வெளியேற்றப்படுகிறது. இவ்வாறு வெளியேற்றப்படும் நீர் பல ஏரிகளுக்கு சென்று அதன் பிறகும் உள்ள உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் கலந்து கடலை நோக்கி செல்லும். ஆனால் இது பெருமைக்காக மட்டும் பேசப்படும் வார்த்தையாக இருக்கிறது என்பதே விவசாயிகளின் குமுறலாக உள்ளது.

66 மதகுகள் மூலம் தண்ணீர் திறப்பு

இத்தனை சிறப்புகள் மிகுந்த ஏரி ஆங்காங்கே ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டு அதன் பரப்பளவை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது. மேலும் இந்த ஏரி தனது ஆரம்பகால ஆழத்தை இப்போது கொண்டிருக்கவில்லை. பெருமளவு மண், மணல் சேர்ந்து தூர்ந்து போயுள்ளதால், பருவமழை காலங்களில் ஏரி நிரம்பும் வாய்ப்பு இருந்தும் போதிய தண்ணீரை சேமிக்க முடியாமல் வெளியேற்றப்படுகிறது. இந்த ஏரி நிரம்பி வழியும் காலங்களில், அரசு அதிகாரிகள் கடைவாசல் பகுதியில் உள்ள 57 மதகுகள் மற்றும் மகேந்திரவாடி ஏரிக்கு 9 மதகுகள் என 66 மதகுகள் மூலம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இதன் வாயிலாக பெரிவளையம், தர்மநீதி, சிறுவளையம், துறையூர், ரெட்டி வலம், தென்மாம்பாக்கம், வேட்டாங்குளம், புன்னை உள்ளிட்ட 41 ஏரிகள் பயனடையும் என்பது இந்த ஏரியின் சிறப்பு தன்மையாக விளங்கி வருகின்றன. மேலும் கடந்த ஆண்டு பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, காவேரிப்பாக்கம் ஏரியில் 28 அடி உயரம் வரை தண்ணீர் நிரப்பப்பட்டது. இதனால் ஏரியின் கீழ் பகுதியில் உள்ள கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு, உள்ளிட்டவைகளில் நீர் மட்டம் உயர்ந்து காணப்படுகின்றன. இதனால் விவசாயிகளுக்கு மூன்று போகம் தண்ணீர் பஞ்சம் இருக்காது என்பது விவசாயிகள் நம்பிக்கையாக இருந்து வருகிறது. தற்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகின்றன.இதனால் பாலாற்றின் இரு கரை பகுதிகளிலும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் வாயிலாக காவேரிப்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 154 கன அடி தண்ணீர் வர தொடங்கி உள்ளது. இதன்காரணமாக ஏரியில் தற்போது 24.5 அடி உயரம் வரை தண்ணீர் நிரம்பி இருக்கிறது. மேலும் மழைக்காலம் தொடங்கும் முன்பே காவேரிப்பாக்கம் ஏரிக்கு பாலாற்றில் இருந்து கால்வாயில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தூர்வார வேண்டும்

இதேபோல் பாலாற்றில் இருந்து ஏரிக்கு வரும் கால்வாய் பகுதியை சீரமைப்பு செய்து, ஏரியை நிரப்ப வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு காவேரிப்பாக்கம் ஏரிக்கான நீர்வரத்துக்கால்வாய்களின் ஆக்கிரமிப்புகள் மட்டுமின்றி, நீண்டகாலமாக ஏரி தூர்வாரப்படாததுமே காரணம். எனவே, காவேரிப்பாக்கம் ஏரியின் பழம்பெருமையை மீட்டெடுக்க ஏரியை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு முழுமையாக தூர்வாருவதுடன், அதன் நீர்வரத்துக்கால்வாய்கள், இணைப்புக்கால்வாய்களை ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்டு சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் சங்க நிர்வாகிகளிடம் கேட்டபோது, காவேரிப்பாக்கம் ஏரி நிரம்பி வழியும் போது கடை வாசல் பகுதியில் உள்ள மதகுகள் மூலம் உபரி நீர் வெளியேற்றப்படும். இந்த உபரி நீர்தான் கொசஸ்தலை ஆற்றின் தொடக்கமாகும். இவ்வாறு வெளியேற்றப்படும் தண்ணீர் சென்னை, திருவள்ளூர் பகுதி மக்களுக்கான நீராதாரமாகும் என்றும் சொல்லலாம். இந்த ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரால் 150-க்கும் மேற்பட்ட சிறிய ஏரிகள், குளங்கள், குட்டைகள் நீராதாரத்தை பெறுகின்றன. இத்தகைய சிறப்புவாய்ந்த ஏரியை அரசாங்கம் தூர்வார உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுற்றுலா தலமாக்க வேண்டும்

மேலும் இந்த ஏரியை சுற்றுலாத்தலமாக அறிவித்து, படகு சவாரி போன்ற பொழுது போக்கு அம்சங்களை கொண்டு வர வேண்டும். இதனால் அரசுக்கு வருவாய் கிட்டும் என்றனர். மேலும் 1984-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்.) திருமண நிகழ்ச்சி ஒன்றுக்காக வருகை தந்தார். அப்போது காவேரிப்பாக்கம் ஏரியை பார்வையிட்டதாகவும், அங்கு பொதுப்பணி துறை சார்பில் கட்டப்பட்ட சொகுசு மாளிகையில் தங்கி ஓய்வு எடுத்ததாகவும் தெரிவித்தனர். இதனை அவரது நினைவாகவே சீரமைக்க வேண்டும். இதுபற்றி கடந்த ஆட்சியில் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதனை சீரமைக்கவில்லை. இந்த ஆட்சியிலாவது இதனை சீரமைத்து அவரது நினைவாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

காவேரிப்பாக்கம் ஏரி கரையின் அகலம் 3.5 மீட்டர் ஆகும். ஆனால் தற்போது ஏரியின் கரையின் இருபக்கமும் புதர்கள் முளைத்து அடர்ந்து உள்ளது. இதனை சீரமைத்து கரையினை ஒழுங்குபடுத்த வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தற்போது மாவட்ட அமைச்சராக தி.மு.க.வை சார்ந்த ஆர்.காந்தி, சோளிங்கர் தொகுதி எல்.எல்.ஏ.வாக ஏ.எம்.முனிரத்தினம் (காங்கிரஸ் கட்சி) ஆகியோர் உள்ளனர். இவர்கள் முயற்சியிலாவது காவேரிப்பாக்கம் ஏரியை சுற்றுலா தலமாக்க வேண்டும் என்பது இந்த பகுதியுடைய மக்கள், விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்