விறுவிறுப்பாக நடைபெறும் ஜாக்சன் துரை- 2 படப்பிடிப்பு

இயக்குனர் பி.வி.தரணி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜாக்சன் துரை 2’. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Update: 2023-06-15 16:53 GMT

கடந்த 2016-ஆம் ஆண்டு இயக்குனர் பி.வி.தரணி இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'ஜாக்சன் துரை'. இப்படத்தில் சத்யராஜ் மற்றும் சிபி சத்யராஜ் இணைந்து நடித்தனர். மேலும், பிந்து மாதவி, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். காமெடி பேய் படமாக உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதிலும் சத்யராஜ், சிபிராஜ் இணைந்து நடிக்கிறார்கள். கதாநாயகியாக சம்யுக்தா விஸ்வநாதன் நடிக்கிறார். மேலும், சரத் ரவி, மணிஷா ஐயர், பாலாஜி, ரசிகா, யுவராஜ் கணேசன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

1940-ல் ஊட்டி அருகிலுள்ள கிராமம் ஒன்றின் கதையை மையமாக கொண்டு உருவாகி வரும் இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஜாக்சன் துரை 2' திரைப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. மேலும், இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக பிரிட்டிஷ் கால செட் அமைக்கப்பட்டுள்ளது. இதனை நடிகர் சிபிராஜ் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்