வைரலாகும் விக்ரம் படத்தின் சூர்யா ஃபர்ஸ்ட் லுக்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள 'விக்ரம்' படத்தில் சூர்யாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.;
மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வெளியாக இருக்கும் திரைப்படம் 'விக்ரம்'. கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் இப்படம் மீது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. 'விக்ரம்' படத்தின் டிரைலரை உலகின் உயரமான கட்டிடமான, துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் உள்ள மிகப்பெரிய திரையில் இன்று இரவு 8.10 மணிக்கு திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் 'விக்ரம்' படத்தில் சூர்யாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் ஃபாசில் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர்களை குறிப்பிட்டு போஸ்டர்களை படக்குழு வெளியிட்டிருந்தது. தற்போது சூர்யா நடித்துள்ள கதாப்பாத்திரத்தின் பெயர் என்ன என்று ரசிகர்களை கேள்வி கேட்கும் வகையில் இந்த போஸ்டர் இடம்பெற்றிருக்கிறது. இதனுடன் சூர்யாவிற்கு நன்றி தெரிவித்து லோகேஷ் கனகராஜ் இந்த போஸ்டரை வெளியிட்டிருக்கிறார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.