ரஜினியின் தாக்கத்தில் உருவானதுதான் ஜிகர்தண்டா-2.. கார்த்திக் சுப்பராஜ் விளக்கம்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'ஜிகர்தண்டா 2'. இப்படம் நவம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Update: 2023-11-08 17:58 GMT

'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இப்படம் நவம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியானது. இதில், தமிழ் சினிமாவின் முதல் கருப்பு ஹீரோ போன்ற வசனங்கள் இடம்பெற்று ரசிகர்களை கவர்ந்தது.

இந்நிலையில், ரஜினிகாந்தின் தாக்கத்தை வைத்துதான் 'ஜிகர்தண்டா 2' படத்தின் கதை எழுதியதாக கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, கடந்த 1975-ஆம் ஆண்டு வெளியான 'அபூர்வ ராகங்கள்' என்ற திரைப்படத்தின் மூலம் தான் ரஜினிகாந்த் அறிமுகமானார்.

தமிழ் சினிமாவின் முதல் கருப்பு ஹீரோ அறிமுகமான இந்த ஆண்டை எனது கருப்பு ஹீரோ கதாபாத்திரத்திற்கு பயன்படுத்திக் கொண்டேன். அந்த இடத்திலிருந்து தான் இந்த படத்தின் முக்கியமான கதை மற்றும் திரைக்கதை தொடங்கியது என்றும் அவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்