மேடையிலேயே விஜய் சேதுபதியிடம் கால்ஷீட் கேட்ட ஜெயம் ரவி

நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள திரைப்படம் ‘இறைவன்’. ’இறைவன்’ திரைப்படம் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.;

Update: 2023-09-26 16:50 GMT

இயக்குனர் அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'இறைவன்'. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 'இறைவன்' திரைப்படம் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ஜெயம் ரவி பேசியதாவது, இறைவன் என்றாலே அன்புதான். எதுக்கு இந்தப் பெயர் வைத்தீர்கள் என என்னிடம் நிறைய பேர் கேட்டார்கள். இந்தத் தலைப்பை இயக்குனர் சொன்ன போது, 'இன்னுமா யாரும் இந்த தலைப்பை வைக்கவில்லை?' என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அன்பை கொடுக்கும் இறைவனை ஏன் தலைப்பாக வைக்கவில்லை என்று தோன்றியது. இந்த அன்பில்தான் படம் தொடங்கியது.

கோவிட் காரணமாக 'ஜனகனமண' நின்றது. அதன் பின்புதான் 'இறைவன்' தொடங்கியது. நான் பார்த்த முதல் நடிகன் ரவிதான் என விஜய் சேதுபதி சொன்னார். ஆனால், நான் இயக்க வேண்டும் என நினைத்த முதல் ஹீரோ விஜய்சேதுபதிதான். சீக்கிரம் எனக்கு கால்ஷீட் கொடுங்கள். வினோத் சாரின் படங்கள் திரையுலகை புரட்டிப் போட்டவை. அவருக்கும் நன்றி. அஹமது சாரின் அன்பும் நட்பும் எனக்கு எப்போதும் தேவை. அழகர் சாருக்கு இந்தப் படம் மிகப்பெரிய லாபம் கொடுக்கும்.

விஜயலட்சுமி, நரேன் சிறப்பாக நடித்துள்ளனர். அப்பாதான் நான் உருவான இடம். நிறைய கற்றுக் கொடுத்துள்ளார். தயாரிப்பாளர் சுதன் எங்களுக்கு சிறப்பாக செய்துள்ளார். 'பொன்னியின் செல்வன்' படமெல்லாம் முடித்து விட்டு என்ன செய்ய போகிறாய் என்று என் அண்ணன் கேட்டார். ஏன் 'தனி ஒருவன்2' பண்ண மாட்டாயா எனக் கேட்டேன். அப்படி ஒரு அண்ணன் இருக்கும் போது எல்லாமே எனக்கு ஜெயம்தான். 'இறைவன்' படம் எல்லாருக்கும் பிடிக்கும். நான் இந்தப் படத்தில் நன்றாக நடித்திருக்கிறேன் என்றால் யுவனும் அதற்குக் காரணம். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்