நான்தான் மஞ்சிமாவிடம் முதலில் புரோபோஸ் செய்தேன் - நடிகர் கவுதம் கார்த்திக்
நடிகர் கவுதம் கார்த்திக்கும் மஞ்சிமா மோகனும் சமீபத்தில் தங்கள் காதலை உறுதி செய்தனர். இவர்களுக்கு வருகிற நவம்பர் 28-ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.;
நடிகர் கார்த்திக் மகனான கவுதம் கார்த்திக்கும் மஞ்சிமா மோகனும் காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் இருவரும் தங்கள் காதலை சமூக வலைதளம் மூலம் உறுதி செய்தனர். இதனிடையே இவர்கள் இருவருக்கும் வருகிற நவம்பர் 28-ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் பரவி வந்தது.
இந்நிலையில், கவுதம் கார்த்திக்கும் மஞ்சிமா மோகனும் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது கவுதம் கார்த்திக் பேசியதாவது, "வருகிற நவம்பர் 28-ஆம் தேதி எங்கள் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளது. இந்த திருமணம் குடும்பத்தினர் மட்டும் பங்கேற்கும்படியாக நடக்கிறது. திருமணத்துக்கு உங்களின் அன்பும் ஆசியும் தேவை.
நான்தான் முதலில் மஞ்சிமாவிடம் புரோபோஸ் செய்தேன். அவர் இரண்டு நாள் நேரம் எடுத்துக்கொண்டு அதன்பின் தான் எனது காதலை ஏற்றுக்கொண்டார். அந்த இரண்டு நாட்கள் எனக்கு மிகவும் பயமாக இருந்தது. இப்போது எங்கள் காதல் திருமண வாழ்க்கையில் இணையவுள்ளது.
மஞ்சிமா அழகானவர் மட்டுமல்ல, வலிமையான பெண்ணும்கூட. நான் எப்போது பலவீனமாக இருந்தாலும், என்னை அதிலிருந்து தூக்கிவிடுவது அவர்தான். தேவராட்டம் படத்தில் நடித்தபோது நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். கிட்டத்தட்ட ஒருவருடம் கழித்தே நாங்கள் காதலித்தோம்" என்று பேசினார்.