நான் கலைப்படம் பண்ணவில்லை கலாய் படம் பண்ணியுள்ளேன் - டைனோசர்ஸ் இயக்குனர் பேச்சு

இயக்குனர் எம்.ஆர்.மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'டைனோசர்ஸ்'. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது.

Update: 2023-04-27 17:49 GMT

புதுமுக இயக்குனர் எம்.ஆர்.மாதவன் இயக்கியுள்ள திரைப்படம் 'டைனோசர்ஸ்'. இப்படத்தில் உதய் கார்த்தி, ரிஷி ரித்விக், சாய் பிரியா, யாமினி சந்தர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கேலக்ஸி பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு போபோ சசி இசையமைத்துள்ளார். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தஸ்தா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஆர். கலைவாணன் படத்தொகுப்பு மேற்கொண்டுள்ளார். புதுமுகங்கள் நடிப்பில் கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

'டைனோசர்ஸ்' திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் எம்.ஆர்.மாதவன் பேசியதாவது, சினிமா கண்டிப்பாக அனைவரையும் எட்டி உதைக்கும் நாம் தான் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். இந்தப்படம் பல கதாநாயகர்களிடம் சென்றது ஆனால் கார்த்திக் இப்படத்தில் கச்சிதமாகப் பொருந்தியுள்ளார். பல நண்பர்களின் முயற்சியால் தான் நான் இங்கு வந்தேன். தயாரிப்பாளர் ஸ்ரீனி சார் எனக்கு தந்தை போன்றவர். நான் கேட்ட அனைத்தும் செய்து கொடுத்தார். நான் வாழ்நாள் வரை அவரை மறக்க மாட்டேன். 143 தயாரிப்பாளரை நான் அணுகியுள்ளேன். ஆனால், இவர்தான் எனக்கு இந்த வாய்ப்பை அளித்தார்.

என்னை இந்த தயாரிப்பாளரிடம் அழைத்துச் சென்றது இயக்குனர் எச். வினோத் தான் அவருக்கு மிகவும் நன்றி. கதாநாயகன் உதய் கார்த்திக் பெரிய நடிகர்களான அஜித், விஜய் போன்று நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இரவு பகல் பாராமல் பணி செய்துள்ளார். ரமணா சார் மிகவும் எளிமையானவர் அவரது எளிமை மிகவும் ஆச்சரியமாக உள்ளது. கதாநாயகி தமிழ் பேசும் நடிகையாகத் தான் இருக்க வேண்டும் என நினைத்தேன் அது போல அவர் அழகாக நடித்துள்ளார். ஸ்ரீனி நடிப்பு இந்த படத்தில் சிறப்பாகப் பேசப்படும்.

ஒளிப்பதிவாளர் என்னுடைய பாதி வேலையை அவரே செய்தார். இந்தப் படத்திற்கு இசையமைத்த போபோ சசி அதிக மெனக்கெடலுடன் உழைத்துள்ளார். இயக்குனர் மிஷ்கின் சாருடன் இணைந்து பணி செய்ய நீண்ட நாட்களாக முயற்சி செய்தேன் ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும் இங்கு அவர் வந்ததற்கு நன்றி. நடிகர் அருண் விஜய் சார் மற்றும் விஜய் குமார் சாருக்கு நன்றி. இந்தப் படம் கண்டிப்பாக உங்களுக்குச் சிறந்த பொழுதுப்போக்காக இருக்கும் நான் கலைப்படம் பண்ணவில்லை கலாய் படம் பண்ணியுள்ளேன். என் வளர்ச்சிக்கு முழுமுதல் காரணமாக இருக்கும் என் அம்மாவிற்கு நன்றி. கண்டிப்பாக இந்தப்படம் உங்களுக்குப் பிடிக்கும். அனைவருக்கும் நன்றி என்று பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்