தனுஷ்-மாரி செல்வராஜ் கூட்டணி படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல்

தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த கூட்டணியின் படப்பிடிப்பு குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.;

Update: 2023-04-12 17:26 GMT

2018-ம் ஆண்டு வெளியான 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். அதன்பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான 'கர்ணன்' திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தார். இவர் இயக்கத்தில் உருவாகி வரும் 'மாமன்னன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

மாரி செல்வராஜ் தற்போது தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தனுசின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

இந்நிலையில் தனுஷ்-மாரி செல்வராஜ் கூட்டணி படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் நடைபெறும் எனவும் இப்படம் தனுஷின் முந்தைய படங்களை விட அதிக பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையில் மாரி செல்வராஜ்-துருவ் விக்ரம் கூட்டணியின் படத்தை முடித்த பிறகு தனுஷ் படத்தை மாரி தொடங்குவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்