சைவ உணவுக்கு மாற நடிகை வேதிகா வேண்டுகோள்
மாமிசம் சாப்பிடுவதை நிறுத்தி சைவ உணவுக்கு மாறுங்கள் என்று நடிகை வேதிகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.;
தமிழில் முனி, காளை, பரதேசி, காவிய தலைவன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான வேதிகா தெலுங்கு, இந்தி, கன்னட மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.
வேதிகா பிராணிகள் பாதுகாப்புக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். மாமிச உணவுக்காக பிராணிகளை இம்சிக்க கூடாது என்றும் போராடி வருகிறார். சமீபத்தில் ஜி 20 மாநாட்டுக்காக தெருநாய்களை துன்புறுத்தியதாக அவர் வெளியிட்ட பதிவு வைரலானது.
தற்போது ஒரு பசுவை கயிற்றில் கட்டி துன்புறுத்திய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் வேதிகா வெளியிட்டுள்ள பதிவில், ''கோழிகள், பசுக்கள், ஆடுகள், பன்றிகளை மாமிசத்துக்காக தொழிற்சாலைகளில் கொடூரமாக கொன்று விற்பனை செய்கிறார்கள்.
இப்போதாவது விலங்குகளை காப்பாற்றுவதற்கான போராட்டத்தில் இணையுங்கள். விலங்குகளை கொல்ல நிதி கொடுப்பதை நிறுத்துங்கள். மாமிசம் சாப்பிடுவதை நிறுத்தி சைவ உணவுக்கு மாறுங்கள்'' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். வேதிகாவுக்கு ஆதரவாக சிலரும் நீங்கள் சைவமாக மாறியதற்காக எல்லோரும் மாற வேண்டுமா என்று சிலர் விமர்சித்தும் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.