திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த நடிகர் சூர்யா
தனது ரசிகர், ரசிகையின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா மணமக்களை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து கூறினார்.;
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் கணேஷ். நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகர். இவருக்கும், அவரைப் போலவே சூர்யாவின் தீவிர ரசிகையான லாவண்யா என்பவருக்கும் கடந்த 1-ந்தேதி கோவிலில் திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் நேற்று திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மணமக்களுக்கு குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ரசிகர் மன்ற நிர்வாகிகள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். அப்போது திடீரென கணேசின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது.
அதனை எடுத்து பார்த்த போது நடிகர் சூர்யா மணமக்கள் இருவருக்கும் திருமண வாழ்த்து சொல்லி இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தினார். மேலும் மணமக்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு மனம் விட்டு பேசிக்கொள்ள வேண்டும் என்ற அறிவுரை கூறிய சூர்யா அவர்களுக்கு திருமண வாழ்த்து கூறினார்.
மேலும் தான் ஒரு மாத காலம் வெளியூரில் இருப்பதால் பிறகு வந்து சந்திப்பதாக கூறினார். திருமண வரவேற்பு நடக்கும் பொழுதே சூர்யா வாழ்த்து கூறிய சம்பவத்தால் மணமக்கள் இருவரும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடினார்கள்.
தனது தீவிர ரசிகர்-ரசிகையின் திருமணத்திற்கு நடிகர் சூர்யா வாழ்த்து கூறியது தற்போது சமூக வலைதளங்களில் வைரலானது.