சினிமா நட்சத்திர அந்தஸ்தை விட்டுவிட்டு டாக்சி ஓட்டுவது ஏன்...? பிரபல ஹீரோ உருக்கமான பேட்டி
சினிமா துறையில் இருந்து வரும் பணத்தில் வாழ்வதே சிரமமாக இருந்தது. இதனால் அதில் இருந்து விலகி குடும்பத்துடன் நியூசிலாந்து சென்றதாக நடிகர் அப்பாஸ் கூறி உள்ளார்.;
சென்னை
தமிழ் சினிமாவில் சாக்லெட் பாயாக வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ். இவர் நடிப்பில் வெளியான 'காதல் தேசம்', படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
மிர்சா அப்பாஸ் அலி என்ற முழுப்பெயர் கொண்ட அப்பாஸ், கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு முன்னாள் இந்திய நடிகரும் மாடலும் ஆவார், இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் சில மலையாளம், இந்தி மற்றும் கன்னடத்திலும் நடித்து உள்ளார்.
1996 ஆம் ஆண்டு கதிரின் காதல் தேசம் மூலம் அப்பாஸ் அறிமுகமானார்.இவருக்கு முதல் படத்திலேயே அதிக பெண் ரசிகர்கள் உருவானார்கள். விஐபி, பூச்சூடவா, ஜாலி. கமலுடன் ஹேராம், பம்மல் கே சம்மந்தம், ரஜினியுடன் படையப்பா உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார்.
ஒரு காலத்தில் தமிழ்த் திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரமாக கருதப்பட்ட அப்பாஸ், போதிய வாய்ப்பு இல்லாத நிலையில், குடும்பத்துடன் நியூசிலாந்தில் செட்டில் ஆகிவிட்டார். தற்போது நியூசிலாந்தில் பைக் மெக்கானிக்காக உள்ளார். கடைசியாக கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பச்சகல்லம் என்ற படத்தில் நடித்திருந்தார்.இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார்.
சமீபத்தில், அப்பாஸ் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-
தொடக்கத்தில் சில படங்கள் வெற்றி பெற்றன. ஆனால், பின்னர் என்னுடைய சில படங்கள் காணாமல் போனது. நான் பொருளாதார ரீதியாக நலிவடைந்தேன். வாடகை கொடுக்க பணம் இல்லை.
எனக்கிருக்கும் பிரபலத்தால் தொடக்கத்தில் வேலை தேடிச் செல்ல முடியவில்லை. கடைசியில் சலித்துப் போய் சினிமாவை விட்டு விலகிவிட்டேன். "எனது பாலிவுட் அறிமுகமான 'ஆன்ஷ்' படத்தைப் பார்க்க வந்த எனது நண்பர்களின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினேன்.
எனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது. நான் 10ம் வகுப்பில் தோல்வியடைந்தேன். அந்த நேரத்தில் என் காதலி என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார்.
சாலையோரத்தில் நின்று கொண்டு, வேகமாக வரும் வாகனத்தின் முன் பாய நினைத்த எனக்கு ஒரு யோசனை உதித்தது. நான் எடுக்கும் முடிவின்படி கார் டிரைவர் நடந்து கொண்டால், அந்த நபரின் வாழ்க்கையும் பாதிக்கப்படும். அந்த தருணத்திலும், நான் மற்றொரு நபரின் நலனைக் கருத்தில் கொண்டு யோசித்தேன்.
கொரோனா காலத்தில் நான் சிலருக்கு உதவியிருக்கிறேன். நியூசிலாந்தில் தங்கியிருந்தபோது ஜூம் அழைப்புகள் மூலம் ரசிகர்களிடம் பேசினேன். தற்கொலை எண்ணம் கொண்டவர்களின் மனநிலையை மாற்ற வேண்டும் என்பதே எனது எண்ணமாக இருந்தது.
நான் என் குடும்பத்தை காப்பாற்ற வேண்டியிருந்தது. அதனால் நான் நியூசிலாந்து சென்றேன். அங்கு மெக்கானிக்காக பணிபுரிந்தேன். டாக்ஸி ஓட்டினேன் என அப்பாஸ் கூறினார்.