பழச்சாறில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டதா- சந்தேகம் கிளப்பிய மன்சூர் அலிகான்

தனக்கு யாரோ பழச்சாறில் விஷம் கலந்து கொடுத்ததாக மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.;

Update:2024-04-18 14:25 IST

வருகின்ற ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பலாப்பழ சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார் மன்சூர் அலிகான். தேர்தல் பரப்புரை நேற்று மாலை 6 மணியோடு முடிவடைந்த நிலையில், அவர் நேற்று காலை முதல் ஆம்பூர் - வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வந்தார். அப்போது குடியாத்தம் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், மன்சூர் அலிகான் குடியாத்தத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். பின் மேல்சிகிச்சைக்காக சென்னை கேகே நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாலை 6 மணி அளவில் மன்சூர் அலிகான் மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மன்சூர் அலிகானுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், தனக்கு யாரோ பழச்சாறில் விஷம் கலந்து கொடுத்ததாக மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தேர்தல் தொடர்பான பணிக்காக குடியாத்தம் சந்தையில் இருந்து வீடு திரும்பியபோது வழியில் சிலர் பழச்சாறு மற்றும் மோர் வழங்கினர். கட்டாயப்படுத்தி அவர்கள் கொடுத்த பழச்சாறை குடித்த சில மணி நிமிடங்களிலேயே மயக்கம், நெஞ்சுவலி ஏற்பட்டது. மேலும், தற்போது சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், விஷ முறிவு, நுரையீரல் வலிக்கான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து பொதுப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்படுவேன் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்