விஜய்யின் கடைசி படம் 'தளபதி 69': 'ஒரு அஜித் ரசிகையாக மிகவும் கஷ்டமாக உள்ளது' - நஸ்ரியா
'தளபதி 69' படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது.;
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவரது நடிப்பில் கடந்த 5ம் தேதி வெளியான தி கோட் விஜய்யின் 68-வது படமாகும். இப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது. அடுத்ததாக விஜய் தனது 69-வது படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'தளபதி 69' என பெயரிடப்பட்டுள்ளது.
தற்போது, இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. நேற்று, இப்படத்தை எச்.வினோத் இயக்க உள்ளதாகவும், அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்த படத்தைத்தொடர்ந்து விஜய், சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். இதனை கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி விஜய் அறிவித்தார். இது தமிழ் சினிமா மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது.
இந்நிலையில், நடிகர் விஜய், சினிமாவை விட்டு விலக உள்ளது குறித்து நடிகை நஸ்ரியா உணர்ச்சிப்பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் . மேலும், இது ஒரு அஜித் ரசிகையாக எனக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது என்றும் தன் கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.