இணையதளத்தில் மீண்டும் கசிந்த விஜய் படக்காட்சி

விஜய் படக்காட்சி இணையதளத்தில் மீண்டும் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update:2022-08-24 18:07 IST

விஜய் நடிப்பில் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகி வரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை கொண்ட புகைப்படங்களும், வீடியோக்களும் இணைய தளத்தில் திருட்டுத்தனமாக அடுத்தடுத்து வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி வருகின்றன. சில வாரங்களுக்கு முன்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் படப்பிடிப்பு நடந்தபோது அதை செல்போனில் படம் பிடித்து இணையத்தில் பரவ விட்டனர். பின்னர் பைக்கில் வரும் வில்லனை விஜய் கிழே தள்ளிவிட்டு சண்டை போடும் காட்சியை படமாக்கியபோது அதையும் யாரோ படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டனர். அதன்பிறகு விஜய் கோட் சூட் அணிந்து தொழிலாளர்களுடன் பேசிக்கொண்டு இருப்பது போன்ற காட்சியும், விஜய், சரத்குமார், பிரபு ஆகியோர் ஆஸ்பத்திரியில் இருப்பதுபோன்ற காட்சிகளும் வலைத்தளத்தில் கசிந்தன. இதையடுத்து தற்போது விசாகப்பட்டினத்தில் நடந்து வரும் படப்பிடிப்பை வெளியாட்களை அனுமதிக்காமல் பாதுகாப்போடு நடத்தி வந்தனர். அதையும் மீறி விஜய்யும், படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனாவும் சிவப்பு நிற உடையில் காதல் காட்சியில் பங்கேற்று நடனம் ஆடும் புகைப்படம் வலைத்தளத்தில் கசிந்துள்ளது. இந்த காட்சியை திருட்டுத்தனமாக படம் பிடித்து வெளியிட்டவர் யார் என்று படக்குழுவினர் விசாரணை நடத்துகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்