விருது விழாவில் அவமதிப்பு : 'அதை நினைத்து அன்று இரவு தூங்கவில்லை' - வித்யாபாலன் வருத்தம்
எனக்கு மாடர்ன் உடைகளை விட புடவை அணிவது மிகவும் பிடிக்கும் என்று வித்யாபாலன் கூறினார்.
சென்னை,
இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் வித்யாபாலன், மறைந்த சில்க் சுமிதா வாழ்க்கை கதையான தி டர்ட்டி பிக்சர் படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். தமிழில் அஜித்குமாரின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், சினிமாவில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து வித்யாபாலன் கூறியதாவது, "நான் ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டேன். அங்கு எனக்கு 'ஹேய் பேபி' படத்தில் நடித்ததற்காக விருது கொடுத்தனர். அது ரசிகர்களின் ஆதரவை பெறாததற்கான விருது. அந்த விருதை அறிவித்தபோது, எனது உடைகள் நான் தேர்வு செய்தது அல்ல. ஆடை வடிவமைப்பாளர்தான் தயார் செய்து கொடுத்தார் என்றேன். ஆனாலும் அவர்கள் கேட்கவில்லை. அந்த நேரத்தில் தைரியமாக பேசமுடியாமல் தவித்தேன்.
அந்த விருதை மவுனமாக வாங்கிக்கொண்டேன். அவமானத்தை நினைத்து அன்று இரவெல்லாம் நான் தூங்கவில்லை. தனிமையாக இருப்பதுபோல் உணர்ந்தேன். சினிமா பின்னணி இல்லாமல் திரையுலகுக்கு வந்தால் இதுபோன்ற அவமானங்களை எதிர்கொள்ள வேண்டும் என்று புரிந்து கொண்டேன். எனக்கு மாடர்ன் உடைகளை விட புடவை அணிவது மிகவும் பிடிக்கும்'' இவ்வாறு கூறினார்