இசையமைப்பாளர் வித்யாசாகரின் முதல் தெய்வீக பாடல் வெளியானது
வித்யாசாகர் முதல்முறையாக 'அஷ்ட ஐயப்ப அவதாரம்' என்ற தெய்வீக பாடல்கள் அடங்கிய ஆல்பத்திற்கு இசையமைத்துள்ளார்.
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் வித்யாசாகர். இவரை அனைவரும் அன்போடு மெலடி கிங் என அழைத்து வாழ்த்துகின்றனர். 1989ல் வெளியான 'பூ மனம்' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக திரையுலகில் அறிமுகமானார். இதுவரை 225க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
தமிழில் ஜெய் ஹிந்த், தில், பூவெல்லாம் உன் வாசம், தவசி, ரன், வில்லன், தூள், இயற்கை, சந்திரமுகி, கில்லி, மொழி, குருவி போன்ற படங்களுக்கு இசையமைத்து பெரும் வெற்றியை பெற்றவர். மலையாள திரையுலகிலும் அவருக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அவருடைய இசையில் வெளியான நிறம், தேவதூதன், தோஸ்த், மீச மாதவன், முல்லா போன்ற மலையாள படங்கள் மிகப்பெரிய ஹிட்டுகளாகின.
வித்யாசாகர் தற்பொழுது முதல்முறையாக 'அஷ்ட ஐயப்ப அவதாரம்' என்ற தெய்வீக பாடல்கள் அடங்கிய ஆல்பத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த ஆல்பத்தில் முழுக்க முழுக்க ஐயப்பனைப் பற்றிய மலையாள பாடல்கள் இடம் பெற்றுள்ளன.இந்த ஆல்பத்தின் முதல் டைட்டில் பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்பாடலை திருபுகழ் மதிவானன் வரிகளில் விஜய் பிரகாஷ் பாடியுள்ளார்.இந்த பாடலின் வீடியோவில் வித்யாசாகர் பாடுவது போல் வீடியோ காட்சிகள் அமைந்துள்ளது.
மீரா மஹதி எழுதி இயக்கியுள்ள 'டபுள் டக்கர்' படத்திற்கு சமீபத்தில் வித்யாசாகர் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. விமல் நடிப்பில் உருவாகும் 'தேசிங்கு ராஜா 2' படத்துக்கு வித்யாசாகர் இசையமைக்கிறார்.