பழம்பெரும் நடிகை சி.ஐ.டி சகுந்தலா காலமானார்
சி.ஐ.டி சகுந்தலா மறைவுக்கு நடிகர், நடிகைகள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.;
சென்னை,
பழம்பெரும் நடிகை சி.ஐ.டி. சகுந்தலா(84) காலமானார். வயது மூப்பு காரணமாக நோய்கள் இருந்ததாக தெரிவித்த அவரது குடும்பத்தினர் நேற்று மாலை அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். அவரது மறைவுக்கு நடிகர், நடிகைகள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பின்னணி நடனக் கலைஞராக சினிமாவில் கால் பதித்த நடிகை சகுந்தலா, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத் திரையுலகில் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். நேதாஜி (1996), நான் வணங்கும் தெய்வம் (1963), கை கொடுத்த தெய்வம் (1964) உள்ளிட்ட படங்களுக்காக சகுந்தலா அறியப்பட்டார்.
சி.ஐ.டி சங்கர் (1970) படத்தில் ஜெய்சங்கருக்கு ஜோடியாக இவர் நடித்தார். அதன் பிறகு இவரை 'சி.ஐ.டி சகுந்தலா' என்று அன்புடன் அழைக்கத் தொடங்கினார். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் 'பொன்மானை தேடி'. அதன்பின்னர், பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்திருந்தார்.