நடிகை துனிஷா தற்கொலை வழக்கு; நடிகர் ஷீஷன் கான் ஜாமினில் விடுதலை

நடிகை துனிஷா தற்கொலை வழக்கில் சிறையில் இருந்த நடிகர் ஷீஷன் கான் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.

Update: 2023-03-05 09:27 GMT

மும்பை,

இந்தி சினிமா துறையில் பிரபல நடிகை துனிஷா சர்மா. மராட்டியத்தை சேர்ந்த 20 வயதான துனிஷா நடிகைகள் கத்ரீனா கைப், வித்யா பாலன் உள்ளிட்டோருடன் நடித்துள்ளார்.

பின்னர், இந்தி சினிமா துறையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று துனிஷா பிரபலமடைந்தார். அலிபாபா தாஸ்தென் - இ - காபுல் என்ற வெப்தொடரில் துனிஷா சர்மா கதாநாயகியாக நடித்து வந்தார்.

இதனிடையே, துனிஷா சர்மா கடந்த ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி துனிஷா சர்மா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அலிபாபா தாஸ்தென் - இ - காபுல் வெப்தொடர் படப்பிடிப்பு தளத்தில் அந்த தொடரின் கதாநாயகன் ஷீஷன் கான் மேக்கப் அறையில் துனிஷா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நடிகை துனிஷாவும் நடிகர் ஷீஷன்கானும் காதலித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் துனிஷாவின் காதலனான நடிகர் ஷீஷன் கானை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த தற்கொலை தொடர்பாக 500 பக்க குற்றப்பத்திரிக்கையை போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், சிறையில் உள்ள தனக்கு இந்த வழக்கில் ஜாமின் வழங்கும்படி நடிகர் ஷீஷன்கான் மும்பை வசாய் செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த ஜாமின் மனுவை நேற்று விசாரித்த கோர்ட்டு நடிகர் ஷீஷன்கானுக்கு ஜாமின் வழங்கியது. 1 லட்ச ரூபாய் பிணையில் ஷீஷன்கானுக்கு கோர்ட்டு ஜாமின் வழங்கியது. மேலும், அவர் தன் பாஸ்போர்ட்டை கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் என்றும் அனுமதியின்றி வெளிநாடு செல்லக்கூடாது என்றும் கோர்ட்டு நிபந்தனை விதித்தது. நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதையடுத்து ஷீஷன்கானுக்கு கோர்ட்டு ஜாமின் வழங்கியது. ஜாமின் வழங்கப்பட்டதையடுத்து தானே சிறையில் இருந்து நடிகர் ஷீஷன்கான் இன்று விடுதலை செய்யப்பட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்