லியோ இசை வெளியீட்டு விழா ரத்து - தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
நடிகர் விஜய்யின் லியோ பட இசை வெளியீட்டு விழாவினை நடத்தப்போவதில்லை என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.;
சென்னை,
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'லியோ' திரைப்படம் அக்டோபர் மாதம் 19-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழாவை விரைவில் நடத்த படக்குழு திட்டமிட்டு இருந்தது.
இந்நிலையில் நடிகர் விஜய்யின் லியோ பட இசை வெளியீட்டு விழாவினை நடத்தப்போவதில்லை என அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், "லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்கிறோம். நிகழ்ச்சியை காண வரும் ரசிகர்களின் பாஸ் கோரிக்கைகள் எதிர்பார்த்ததை விட அதிகமாக வருகின்றன. எனவே பாதுகாப்பு கட்டுப்பாடுகள் மற்றும் ரசிகர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளோம். பலர் நினைப்பது போல், இது அரசியல் அழுத்தங்களினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ அல்ல" என்று அதில் பதிவிடப்பட்டுள்ளது.