மக்களை கட்டிப்போட்ட சினிமா கொட்டகை: 15. திருப்பூர் உஷா

Update: 2023-04-13 04:55 GMT

டாலர் சிட்டி என்று அழைக்கப்படும் திருப்பூர், தொழிலாளர்கள் நிறைந்த பன்முகத் தன்மை கொண்ட நகரம். பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வேலை வாய்ப்புகள் கருதி இங்கே அடைக்கலம் கொண்டிருக்கிறார்கள். உழைத்த களைப்பைப் போக்க அவர்களுக்கு ஒரே நிவாரணம் திரையரங்குகளே!

திருப்பூரில் சினிமா ரசிகர்களின் மகிழ்ச்சி அரங்கமாக இருப்பதில் உஷா தியேட்டரும் ஒன்று! 1968-ம் ஆண்டு தாராபுரம் ரோடு கோட்டை மாரியம்மன் கோவில் அருகே உஷா தியேட்டர் தொடங்கப்பட்டது.

அதன் உரிமையாளர், முத்துசாமி. எம்.ஜி.ஆர். மேல் தீவிர பற்றுக்கொண்ட அவர் பட வினியோகிஸ்தராகவும் இருந்தார்.

அவர் எம்.ஜி.ஆர். நடித்த படங்களை தனது திரையரங்கில் ஆர்வமுடன் திரையிட்டு வந்ததால் எம்.ஜி.ஆர். தியேட்டர் என்ற பெயரும் உஷா தியேட்டருக்கு உண்டு.

1970-ம் ஆண்டு வெளிவந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடித்த மாட்டுக்கார வேலன் 97 நாட்கள் ஓடியது. அந்தப் படம் ஓடியபோது ரசிகர்களின் டிக்கெட்டை தியேட்டர் நிர்வாகத்தினர் குலுக்கல் முறையில் தேர்வு செய்து, ரசிகர் ஒருவருக்கு காளை மாட்டை பரிசாக வழங்கி இருக்கிறார்கள்.

1973-ம் ஆண்டு எம்.ஜி.ஆர்., மஞ்சுளா நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படம் திரைக்கு வந்தது. அப்போதுதான் எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டு அ.தி.மு.க.வை தொடங்கி இருந்த நேரம். படத்தை வெளியிடுவதில் பல நெருக்கடிகள் ஏற்பட்டன. இருந்தாலும் அந்தப் படத்தை திரையிட உஷா தியேட்டர் நிர்வாகத்தினர் அதிக அக்கறை எடுத்துக் கொண்டார்கள்.

உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் படப்பெட்டியை வாங்குவதற்கு சென்னைக்கு விமானத்தில் சென்று ரெயில் மூலம் படப்பெட்டியை திருப்பூர் கொண்டு வந்தார்கள். திருப்பூர் ரெயில் நிலையத்தில் படப்பெட்டியை பெறுவதற்கு பெருந்திரளான ரசிகர்கள் திரண்டுவிட்டனர். அங்கிருந்து உலகம் சுற்றும் வாலிபன் படப்பெட்டியைக் குதிரை வண்டியில் ஏற்றிக்கொண்டு தியேட்டர் வரை ஊர்வலமாக கொண்டுவந்தார்கள். தியேட்டர் முன் டிக்கெட் வாங்குவதற்கு ரசிகர்கள் கூட்டம் நீண்ட வரிசையில் காத்து நின்றது. அவர்களில் படத்தை பார்ப்பதற்கு முந்தைய நாளே பாய், தலையணையுடன் தியேட்டருக்கு முன் தூங்கிய ரசிகர்களும் உண்டு.

2007-ம் ஆண்டு பருத்திவீரன் படம் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருந்தது. அப்போது நடிகர் கார்த்தி தியேட்டருக்கு வந்து காட்சியின் இடைவேளையின் போது ரசிகர்களை சந்தித்து உரையாடிச் சென்றிருக்கிறார். கார்த்தியின் தந்தை நடிகர் சிவகுமார் உஷா தியேட்டர் உரிமையாளருக்கு உறவினர் என்பது கூடுதல் தகவல். ஊரில் சொந்த பந்தங்களில் நடக்கும் திருமண விழாக்களில் நடிகர் சிவகுமார் குடும்பத்துடன் கலந்துகொள்வதும், அப்போது அவருடன் சந்தித்து அனைவரும் கலந்துரையாடுவதும் வழக்கமாக நடப்பது என்கிறார்கள்.




2012-ம் ஆண்டு வெளிவந்த நடிகர் விஜய் நடித்த நண்பன் திரைப்படம் உஷா தியேட்டரில் ஓடிக்கொண்டு இருந்தபோது, ரசிகர்களைச் சந்திக்க விஜய் ஒருமுறை தியேட்டருக்கு வந்தார். உஷா தியேட்டரின் பிரமாண்டத்தைப் பார்த்து வியந்த அவர், திரையரங்கின் வடிவமைப்பு சிறப்பாக இருப்பதாக உரிமையாளரிடம் பாராட்டினார். அவரை பார்ப்பதற்காக தியேட்டருக்கு முன்பு தாராபுரம் ரோடு முழுவதும் ரசிகர்கள் திரண்டு இருந்தனர். கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவிட்டது. நடிகர் விஜய் தியேட்டருக்கு முன் வந்து நின்று ரசிகர்களை பார்த்து கையசைத்தார். அவர் காரில் ஏறிச் செல்வதற்குகூட நீண்ட நேரம் ஆனது. அந்த அளவில் ரசிகர்கள் கூட்டத்தை அன்று காணமுடிந்ததாக தியேட்டர் நிர்வாகத்தினர் தெரிவிக்கிறார்கள்.

கொடி படம் திரையிட்ட சமயத்தில் நடிகர் தனுசும், எதிர்நீச்சல் படம் திரையிட்டபோது, அந்த படத்தின் நாயகன் சிவகார்த்திகேயனும் தியேட்டருக்கு வந்திருக்கிறார்கள். ரசிகர்களுடன் அமர்ந்து சிவகார்த்திகேயன் படம் பார்த்துச் சென்றிருக்கிறார்.

இவ்வாறாக திருப்பூர் திரை ரசிகர்களுக்கு மகிழ்வூட்டி வரும் உஷா தியேட்டர் கடந்த 2007-ம் ஆண்டு மின் கசிவு காரணமாக தீப்பற்றி சேதமடைந்தது. பின்னர் அது நவீனத்திற்கு ஏற்ப புதுப்பிக்கப்பட்டு 2010-ம் ஆண்டு முதல் உஷா மெகா, உஷா மினி என இரண்டு திரையரங்குகளாக பீடுநடை போட்டுக் கொண்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்