மதுரையின் அடையாளமாக கருதப்பட்டு வந்ததில் ஒன்று, தேவி திரையரங்கம். 1946-ம் ஆண்டு காலகட்டத்தில் அது கட்டப்பட்டு வந்தது. திரையரங்கு கட்டிக் கொண்டு இருந்தபோது, ஒரு சிறு தடை ஏற்பட்டது. தடை சிறிது என்றாலும் அது கட்டிடப் பணி முடியும் காலத்தை கணிசமாக தள்ளிப் போட்டுக்கொண்டு வந்தது.
இரண்டாம் உலகப்போர் இறுதிக் கட்டத்தை எட்டிக் கொண்டு இருந்த வேளை. இப்போது போல் கட்டிட தளவாடங்கள் அப்போது எளிதில் கிடைப்பது இல்லை. தேவி திரையரங்கு கட்டிடம் எழுப்பப்பட்டு, இருக்கைகள் அமைக்கும் பணி நடைபெற இருந்தது.
இருக்கைகளை பொருத்துவதற்கு இரும்பு நட்டுகளை பயன்படுத்துவார்கள். அதனுடன் இரும்பு 'வாசர்'களை இணைத்து பொருத்துவார்கள். அந்த இரும்பு 'வாசர்'கள் அப்போது கிடைக்கவில்லை.
சீப்பு இல்லாமல் அலங்காரம் நிற்பது போல், 'வாசர்' இல்லாமல் தியேட்டர் கட்டுமானப் பணி நிறைவடையாமல் நின்றது.
அந்த நேரத்தில் கட்டிடப் பொறியாளர்களுக்கு ஒரு பொறித் தட்டியது. காலணா என்பது அப்போது புழக்கத்தில் இருந்த ஒரு நாணயம்.
செம்பு உலோகத்தால் செய்யப்பட்டது. வட்ட வடிவில் இருக்கும் அந்த நாணயத்தின் நடுவில் துளை உண்டு. ஏறத்தாழ இரும்பு 'வாசர்' போலவே தோற்றம் கொண்ட அதை 'ஓட்டக் காலணா' என்று அழைப்பது உண்டு.
எனவே 'வாசர்' களுக்குப் பதிலாக அந்த ஓட்டக் காலணாவைப் பயன்படுத்துவது என்று பொறியாளர்கள் முடிவு செய்தனர். முடங்கிக் கிடந்தப் பணியை முடுக்கிவிட்டார்கள். அது எப்படியோ மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிந்துவிட்டது.
நாணயத்தை எப்படி கட்டிடப் பணிக்கு பயன்படுத்தலாம்? அது நமது நாட்டின் இறையாண்மைக்கு இழுக்கு ஆகாதா? என்று ஓடிவந்து தியேட்டர் கட்டுமானப் பணிக்கு தடை விதித்துவிட்டார்கள்.
சில மாதங்கள் உருண்டோடின. சுமார் 5 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டு வந்த அந்த திரையரங்கம் நிறைவு பெறாமல் அரைகுறையாக நின்றது. 5 லட்ச ரூபாய் என்பது அந்த காலகட்டத்தில் மிகப்பெரிய தொகை. அவ்வளவு பணத்தையும் முடக்கிவிட்டு அதன் உரிமையாளர் கருப்பையா பிள்ளை, விழிபிதுங்கிக்கொண்டு இருந்தார்.
இந்த விவகாரம் நீதி கட்சித் தலைவரும், சென்னை மாகாண முன்னாள் முதல்-மந்திரியுமான பி.டி.ராஜன் காதுகளில் விழ, அதன் பிறகு தியேட்டர் கட்டுமான பணிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலகியது.
1948-ம் ஆண்டு தேவி திரையரங்கம் திறப்பு விழா கண்டது. சுமார் 1500 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து படம் பார்க்கும் அளவில் திரையரங்கம் விசாலம் கொண்டது. ஒலி- ஒளியும் மிகவும் நேர்த்தியாக அமையப்பெற்று, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவந்தது.
ஒரு படம், இப்போது ஒரு வாரம் ஓடி விட்டால் போதும் ஆ! ஓ! வெற்றி பெற்றுவிட்டது என்கிறார்கள். ஆனால் எம்.ஜி.ஆர்., சிவாஜி காலங்களில் அப்படி அல்ல.
1967-ல் எம்.ஜி.ஆரை, நடிகர் எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கழுத்தில் குண்டுக் காயம் அடைந்த எம்.ஜி.ஆர். அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். சிகிச்சைக்குப் பின்னர் உடல்நலம் தேறினார்.
அந்த நேரத்தில்தான் 'அரசகட்டளை' படம் வெளியானது.
மதுரையில் தேவி தியேட்டரில் திரையிடப்பட்டது. முதல் நாள் கட்சியைக் காண முந்தைய நாளிலேயே ரசிகர்கள் வந்து திரண்டுவிட்டார்கள். ரசிகர்கள் தள்ளுமுள்ளுவை கட்டுப்படுத்த முடியாமல் தியேட்டர் ஊழியர்கள் திணறினார்கள்.
கட்டுக்கடங்காத கூட்டம் என்பதால் ஒரு கட்டத்தில் டிக்கெட் கொடுப்பதை நிறுத்திவிட்டு வெளிப்புறக் கேட்டை மூடிவிட்டார்களாம். ஆனால் கேட்டை பெயர்த்து வீசிவிட்டு ரசிகர்கள் உள்ளே நுழைந்து இருக்கிறார்கள்.
மதுரையில் மட்டும் அல்ல அந்தப் படம் வெளியான பத்து நாட்கள் வரை, அனைத்து ஊர்களிலும் இதே நிலைதான் நிலவி இருக்கிறது. அப்படி ஒரு எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்திருக்கிறது.
தேவி தியேட்டரைப் பொறுத்த அளவில் 1971-ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடைய ஆண்டாகவே சொல்லலாம். அந்த ஆண்டு முழுவதும் தேவியில் சிவாஜி படங்களே ஓடின.
'இரு துருவம்', 'தங்கைக்காக', 'குலமா குணமா', 'சவாலே சமாளி', 'தேனும் பாலும்', 'மூன்று தெய்வங்கள், 'பாபு' போன்ற படங்கள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டன.
அவைகளில் சிவாஜி கணேசனின் 150-வது படமான 'சவாலே சமாளி' பிரம்மாண்ட வெற்றியை பெற்று 100 நாட்களையும் கடந்து ஓடியதுடன் அந்த ஆண்டின் சிறந்த படமாகவும் தேர்வு பெற்றது.
இவ்வாறாக 1948-ம் ஆண்டு தொடங்கி 50 ஆண்டுகளுக்கும் மேலாக கலைச்சேவையை களைப்பு இல்லாமல் செய்துவந்த தேவி திரையரங்கம் 1999-ம் ஆண்டு கலைச் சேவைக்காகவே தனது செயல்பாட்டையே நிறுத்திக் கொண்டது என்று சொன்னால் நம்பவா முடிகிறது? இல்லை, நம்பித்தான் ஆகவேண்டும்.
1999-ம் ஆண்டு 'ஹவுஸ்புல்' என்ற திரைப்படம் வெளிவந்தது. நடிகர் பார்த்திபன் சிந்தனையில் உருவான அந்தப் படத்தில் விக்ரம், சுவலட்சுமி, ரோஜா என பலர் நடித்து இருந்தனர். பார்த்திபன் ஒரு தியேட்டரின் உரிமையாளராக நடித்து இருப்பார். அவரது தியேட்டராக திரையில் காட்டப்படுவது வேறு எதுவும் அல்ல; தேவி திரையரங்குதான்.
அந்தப் படத்திற்கான காட்சிகளை படம் பிடிக்க மதுரை தேவி தியேட்டரை குத்தகைக்கு எடுத்து, படக்குழுவினர் அங்கு முகாமிட்டு படமாக்கி வந்தனர்.
ஒருநாள் படத்தின் 'கிளைமாக்ஸ்' காட்சி படமாக்கப்பட்டது. திடீர் என்று தியேட்டரில் உள் அரங்கம் வெடித்துச் சிதறுவது போன்று அந்தக் காட்சி அமைந்து இருக்கும். அதை படமாக்கிய போது தியேட்டருக்கு சேதம் ஏற்பட்டதாக தியேட்டர் உரிமையாளரின் பேரன் கே.ஆர்.பிரபாகரன் கூறினார்.
அதன்பின்பு 2000-ம் ஆண்டு திரையரங்கை விற்றுவிட்டார்களாம். தற்போது அது இடிக்கப்பட்டு அடுக்குமாடி குடியிருப்பாக மாறி நிற்கிறது.
தேவியின் பழைய நினைவலைகள் மட்டுமே மனதில் மிச்சம் இருப்பதாக கே.ஆர்.பிரபாகரன் சொன்னபோது மனதில் உருக்கமும் இறுக்கமும் வந்து உட்கார்ந்து கொண்டன.