நடிகையும், பா.ஜ.க. செயற்குழு உறுப்பினருமான நமீதா தமிழ் புத்தாண்டையொட்டி வீடியோவில் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில் அவர் பேசும்போது, "தமிழ் புத்தாண்டு தினத்தன்று உறவினர்கள் நண்பருடன் சேர்ந்து உற்சாகத்துடன் புத்தாண்டை கொண்டாடுங்கள். உற்சாகமாக எழுந்து குளித்து கோவிலுக்கு சென்று கடவுளின் ஆசிர்வாதத்தை பெறுங்கள். அதற்குப் பிறகு பெற்றோரின் ஆசிர்வாதத்தை பெறுங்கள்.
தமிழ் புத்தாண்டு முழுவதும் உங்களது நண்பர்கள் குடும்பத்தினர் உறவினர்களுடன் ஆனந்தமாக கொண்டாடுங்கள். அதுவே நமது கலாசாரம். அதுதான் நமது பாரம்பரியம். டிசம்பர் 31-ந் தேதி நமக்கான புத்தாண்டு கிடையாது. வருகிற 14-ந் தேதி கொண்டாடப்படும் தமிழ் புத்தாண்டு தான் நமக்கான புத்தாண்டு. எல்லோருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்''என்று கூறியுள்ளார்.
நமீதா குஜராத் மாநிலம் சூரத்தில் பிறந்திருந்தாலும் தமிழ் ரசிகர்கள் மீது அன்பு கொண்டவர். தமிழ் ரசிகர்களை 'மச்சான்' என்று அழைப்பது வழக்கம், இந்த நிலையில் தமிழ் புத்தாண்டை பெருமைப்படுத்தி அவர் வீடியோவில் பேசி இருப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது.