அமீர் கானின் 'தங்கல்' படத்தில் நடித்த சுஹானி பட்னாகர் 19 வயதில் உயிரிழப்பு
'தங்கல்' திரைப்படத்தில் பபிதா குமாரி போகத் என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் சுஹானி பட்னாகர்.
புதுடெல்லி,
ஆமீர் கான் நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான 'தங்கல்' திரைப்படத்தில், பபிதா குமாரி போகத் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் சுஹானி பட்னாகர். அந்த படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக புகழ்பெற்ற சுஹானி பட்னாகர், பல்வேறு விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார். இதனிடையே தனது கல்வியை தொடர்வதற்காக நடிப்பில் இருந்து தற்காலிகமாக ஓய்வு எடுத்தார்.
இந்த நிலையில் சுஹானி பட்னாகருக்கு அண்மையில் கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் மேற்கொண்ட சிகிச்சையில் பக்கவிளைவுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுஹானி பட்னாகர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 19.
சுஹானி பட்னாகர் உயிரிழந்த தகவலை நடிகர் ஆமிர் கானின் படத்தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், சுஹானியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாகவும், சுஹானி இல்லாமல் 'தங்கல்' படம் நிறைவு பெற்றிருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து சுஹானி பட்னாகரின் குடும்பத்தினருக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.