'சில்க் ஸ்மிதா - குயின் ஆப் சவுத்' படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியீடு

மறைந்த பழம்பெரும் நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறு திரைப்படத்திற்கு "சில்க் ஸ்மிதா – குயின் ஆப் சவுத்" என தலைப்பிடப்பட்டுள்ளது.

Update: 2024-12-02 12:43 GMT

சென்னை,

மறைந்த பழம்பெரும் நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. நடிகை சில்க் ஸ்மிதா ஆந்திரா மாநிலத்தில் பிறந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். பல்வேறு மலையாள படங்களில் நடித்த பின் தமிழில் வண்டிச்சக்கரம்திரைப்படம் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் சில்க் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் 'சில்க் ஸ்மிதா' என அழைக்கப்பட்டார். சில்க் ஸ்மிதா கவர்ச்சி மட்டுமல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தினார். பாலுமகேந்திராவின் 'மூன்றாம் பிறை', பாரதிராஜாவின் 'அலைகள் ஓய்வதில்லை' போன்ற படங்களில் தனது அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டை பெற்றார்.

பின்னர் ரங்கா, சகலகலா வல்லவன், மூன்று முகம், கோழி கூவுது உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமா மார்க்கெட்டில் 80 காலகட்டங்களில் உச்சத்தில் இருந்தார். மேலும் சில்க் ஸ்மிதா பல்வேறு படங்களில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் சுமார் 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

 

இன்று சில்க் ஸ்மிதாவின் 64-வது பிறந்த நாள். இந்நிலையில், தமிழில் நடிகை சந்திரிகா ரவி நடிப்பில் உருவாகும் 'சில்க் ஸ்மிதா குயின் ஆப் சவுத்' படத்தின் அறிவிப்பு வீடியோவை வெளியிட்டுள்ளனர். 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தின் மூலம் அறிமுகமானவர் சந்திரிகா ரவி. இப்படத்தை எஸ்டிஆர்ஐ சினிமா தயாரித்துள்ளது. ஜெயராம் இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என பான் இந்திய படமாக வெளியாக உள்ளது.

 

'சில்க் ஸ்மிதா தி அன்டோல்ட் ஸ்டோரி' என்ற படத்தின் பெயர் மாற்றப்பட்டு 'சில்க் ஸ்மிதா - குயின் ஆப் சவுத்' என இடம்பெற்றுள்ளது. வீடியோவில் சில்க் ஸ்மிதா ஒரு தெருவில் காரில் இருந்து வந்து இறங்கி, அங்கிருக்கும் நாய்களுக்கு உணவளிக்கும் வகையில் காட்சி இடம்பெற்றிருக்கிறது. அப்போது அவரை அங்கிருக்கும் ஆண்கள் ஏக்கத்தோடு பார்க்க, சில்க் ஸ்மிதா மீண்டும் காரில் வந்து உட்காருகிறார். அப்போது அவரை சுற்றி எழுந்த விமர்சனங்கள் பின்னணியில் ஒளிக்க அதோடு வீடியோ முடிகிறது. 

Full View
Tags:    

மேலும் செய்திகள்