பொன்னியின் செல்வனில் சிவாஜி நடிக்க விரும்பினார் - நடிகர் பிரபு தகவல்

பொன்னியின் செல்வனில் சிவாஜி நடிக்க விரும்பினார் என்று நடிகர் பிரபு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.;

Update:2022-10-20 07:30 IST

பொன்னியின் செல்வனில் நடித்துள்ள பிரபு அந்த படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கிறார். இதுகுறித்து பிரபு அளித்துள்ள பேட்டியில், ''தமிழ் திரையுலகுக்கு நல்லகாலம் பிறந்துள்ளது. எல்லா படங்களும் வரிசையாக வெற்றி பெறுகின்றன. கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்', மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' ஆகிய படங்கள் உலகளவில் வசூல் சாதனை படைத்துள்ளன. பொன்னியின் செல்வன் படத்தை எம்.ஜி.ஆர்., கமல்ஹாசன் எடுக்க முயன்றார்கள்.

பொன்னியின் செல்வன் கதையை எனது தந்தை சிவாஜி கணேசன் 5 முறை படித்ததாக சொல்வார். அவருக்கும் பொன்னியின் செல்வன் கதை படமானால் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அண்ணன் கமல் அதை படமாக்க முயன்றபோது, வந்தியத்தேவன் வேடத்தில் ரஜினி நடித்தால் நன்றாக இருக்கும் என்று அப்பா யோசனை சொன்னார்.

இந்தநேரத்தில் யாருக்கும் தெரியாத ரகசியம் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். பொன்னியின் செல்வன் படப்பிடிப்பின் போது விக்ரம் பிரபுவிடம் மணிரத்னம் சொன்ன தகவல் அது. "உங்க தாத்தாவை (சிவாஜி கணேசன்) வைத்து ஒரே ஒரு படமாவது இயக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். நான் ஒரு தீவிரமான சிவாஜி ரசிகன். இது யாருக்கும் தெரியாது. அவரை பார்த்தாலே பயமாக இருக்கும். பிறகு எங்கே போய் அவரிடம் கதை சொல்ல முடியும்.'' என்று கூறியிருக்கிறார்.

பொன்னியின் செல்வன் படத்தின் ஒளிப்பதிவாளர் ரவிவர்மா எங்கள் உறவினர். தஞ்சையை சேர்ந்தவர். பொன்னியின் செல்வன் ரிலீசான பின் தஞ்சை பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகமாகி வருகிறது. 2-ம் பாகம் படத்தை எப்போது பார்க்கலாம் என்று பொதுமக்கள் ஆசைப்படுகிறார்கள். முதல் பாகத்தை போலவே, 2-ம் பாகமும் பெரிய வெற்றியடையும்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்