ரூ.300 கோடியில் படமாகும் சக்திமான் தொடர்

Update:2023-06-07 09:52 IST

சூப்பர் ஹீரோ தொடரான சக்திமான், தூர்தர்ஷனில் 1997 முதல் 2005 வரை 8 ஆண்டுகள் 520 எபிசோடுகள் ஒளிபரப்பப்பட்டு பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக குழந்தைகளை மிகவும் கவர்ந்தது. இதில் பண்டிட் கங்காதர் வித்யாதர் மாயாதர் ஓம்கார்நாத் சாஸ்திரி என்ற சக்திமான் கதாபாத்திரத்தில் முகேஷ் கன்னா நடித்து இருந்தார்.

"ஒரு தலைமுறையே பார்த்து வளர்ந்த சக்திமான் தொடரை பிரமாண்ட சினிமா படமாக தயாரிக்க இருக்கிறோம் என்றும், அது இந்த காலத்துக்கும் பொருத்தமான கதை" என்றும் முகேஷ் கன்னா ஏற்கனவே கூறியிருந்தார். ஆனாலும் படவேலைகள் தொடங்காமலேயே இருந்தது. தற்போது இந்த படத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இதுகுறித்து முகேஷ் கன்னா கூறும்போது, "சக்திமான் தொடர் ரூ.200 கோடி முதல் ரூ.300 கோடி வரையிலான பட்ஜெட்டில் சர்வதேச தரத்தில் சினிமா படமாக உருவாக இருக்கிறது. இதுதொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது, கொரோனாவால்தான் இந்த படத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

சக்திமான் கதாபாத்திரத்தில் நான் நடிக்கவில்லை. ஒப்பீடு இருக்க கூடாது என்பதற்காக சிறப்பு தோற்றத்திலும் தோன்றவில்லை. படத்தில் நடிக்க உள்ள நடிகர் நடிகைகள் மற்றும் டைரக்டர் விவரம் விரைவில் வெளியாகும்'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்