என் சொந்த வாழ்க்கையை பற்றி பேசுபவர்களின் பேச்சை கண்டு கொள்ள மாட்டேன் நடிகை ராஷ்மிகா மந்தானா
என் சொந்த வாழ்க்கையை பற்றி பேசுபவர்களின் பேச்சை கண்டு கொள்ள மாட்டேன் என நடிகை ராஷ்மிகா மந்தானா கூறினார்
பெங்களூரு
கன்னடத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனாவுக்கு தொடர்ந்து வெளியான அஞ்சனி புத்ரா, சதக் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே பிரபலமாக்கியது.
அதைவிட 2018 ஆம் ஆண்டு வெளியான கீதா கோவிந்தம் படம் பெரும் வெற்றியைப் பெற்று ராஷ்மிகாவுக்கு பல்வேறு மொழிகளிலும் ரசிகர்களை பெற்றுக் கொடுத்தது என்றே சொல்லலாம்.
இதனையடுத்து 2020 ஆம் ஆண்டு தெலுங்கில் அதிக வசூல் செய்த படமான சரிலேரு நீகேவ்வாரு, பீஷ்மா, 2021 ல் புஷ்பா ஆகிய படங்களில் நடித்த ராஷ்மிகா தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானார்.
தற்போது முன்னணி நடிகரான விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் அவர் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் மிஷன் மஜ்னு என்ற இந்தி படத்திலும், புஷ்பா படத்தின் 2 ஆம் பாகத்திலும் ராஷ்மிகா நடித்து வருகிறார்.
இதனிடையே தனது கிரிக் பார்ட்டி படத்தை தயாரித்து ஹீரோவாக நடித்திருந்த ரக்ஷித் ரெட்டியுடன் காதல் ஏற்பட்டு நிச்சயதார்த்தம் வரை நடந்த நிலையில் ராஷ்மிகாவின் படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றதால் அவர் திருமண முடிவில் இருந்து விலகினார்.
இந்நிலையில் சமீபத்தில் ராஷ்மிகா பங்கேற்ற நேர்காணல் ஒன்றில், அவர் தனது முதல் படமான கிரிக் பார்ட்டி பற்றி பேசிய நிலையில், அந்த படத்தை தயாரித்த ரக்ஷித் ஷெட்டியின் நிறுவனத்தின் பெயரை சொல்லாமல் இருந்தார்.
ராஷ்மிகாவின் இந்த அணுகுமுறையால் ரசிகர்கள் கோபமடைந்தனர். மேலும் அவர் இந்தி, தமிழ் என தன்னை வளர்த்து விட்ட கன்னட திரையுலகை விட்டு வேறு மொழியில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் கன்னட திரையுலகம் ராஷ்மிகாவுக்கு நிரந்தர தடை போடலாம் என கூறப்பட்டது.
இந்த நிலையில், அந்த பிரச்சனை தொடர்பான கேள்விக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா செய்தியாளர்களை சந்தித்த போது விளக்கம் அளித்துள்ளார்.
காந்தாரா படம் பார்க்கவில்லை என நடிகை ராஷ்மிகா மந்தனா சொன்னது தான் மீண்டும் இந்த சர்ச்சையே வெடிக்க காரணம் என கூறப்பட்ட நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பின் போது அதுதொடர்பாக கேட்ட கேள்விக்கு காந்தாரா படத்தை பார்த்து விட்டேன். அந்த படக்குழுவினருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளேன். படம் வெளியான சமயத்தில் ஷூட்டிங்கில் பிசியாக இருந்த நிலையில், பார்க்கவில்லை என்றும் விளக்கி உள்ளார்.
தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ள ராஷ்மிகா, வாய்க்கு வந்தபடி பேசுறவங்க பேசட்டும்.. ஆனால், உண்மை அவர்களுக்கு தெரியாது. அதையெல்லாம் பொருட்படுத்த வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.
சினிமாவில் என் நடிப்பில் ஏதாவது குறை இருந்தால் சொல்லுங்கள் அதை திருத்திக் கொள்ள நிச்சயம் உழைப்பேன். சொந்த வாழ்க்கையை பற்றி பேசுபவர்களின் பேச்சை கண்டு கொள்ள மாட்டேன். இதுவரை எனக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை எனக் கூறியுள்ளார்.