ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் 'ஜெயிலர்' பட பர்ஸ்ட் லுக் வெளியீடு
சென்னையில் இன்றுமுதல் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில், 'ஜெயிலர்' படத்தின் பர்ஸ்ட் லுக் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை,
அண்ணாத்த படத்தை தொடர்ந்து 'ஜெயிலர்' படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார் ஜெயிலர் படத்தை இயக்குகிறார். அனிரூத் இசை அமைக்க உள்ள இந்த திரைப்படத்தை, ரஜினிகாந்தின் எந்திரன், பேட்ட, அண்ணாத்த போன்ற படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும் ஜெயிலர் படத்தின் தலைப்பு கடந்த ஜூன் மாதம் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'ஜெயிலர்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருக்கும் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட தோற்றத்தைப் பகிர்ந்துள்ள சன் பிக்சர்ஸ், " ஜெயிலர் இன்று தனது ஆக்ஷனை தொடங்குகிறார்' என்று பதிவிட்டுள்ளது.
முன்னதாக இந்த படத்தை தயாரித்து வரும் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமூக வலைதளத்தின் மூலம் இன்று காலை 11 மணிக்கு பர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தது.
தற்போது ஜெயிலர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
இதனிடையே சென்னையில் இன்று முதல் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.